தமிழக சட்டசபையில் கடந்த மார்ச் மாதம், 2018-2019-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், கடந்த மே மாதம் 29-ந் தேதி முதல் மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சட்டப்பேரவையில் இன்று திமுக எம்எல்ஏவும், உதயநிதி ஸ்டாலினின் நெருங்கிய நண்பருமான அன்பில் மகேஷ் இன்று பேசவிருந்தார். இதைக் காண்பதற்காக உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவைக்கு வந்தார். பின்னர், அவர் பார்வையாளர் வரிசையில் அமர்ந்தார்.
அப்போது, பேரவையில் மானியக்கோரிக்கை மீதான விவாதத்தை தொடங்கி வைத்து பேசிய அன்பில் மகேஷ் பேசினார். அவர் பேசுவதை பார்வையாளர் வரிசையில் பொறுமையாக அமர்ந்து உதயநிதி கவனித்து வந்தார். சுமார் ஒன்றரை மணி நேரம் அமர்ந்து அன்பில் மகேஷின் பேச்சையும், அவை நடவடிக்கைகளையும் கவனித்த பின்னர் உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையிலிருந்து புறப்பட்டுச் சென்றார்.
சமீபகாலமாக திமுக மேடைகளில் அதிகம் தலைகாட்டி வரும் உதயநிதி ஸ்டாலின், செயல் தலைவர் மு.க.ஸ்டாலினால் பங்கேற்க முடியாத மேடை நிகழ்ச்சிகள், திருமண விழாக்கள் உதயநிதி தலைமையில் நடைபெறும் அளவிற்கு அவருக்கு கட்சியில் முக்கியத்துவம் அதிகம் அளிக்கப்பட்டு வருகிறது.