உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலை அருகில் உள்ளது ஒழுங்குமுறை விற்பனை கூடம். இந்த விற்பனை கூடத்திற்கு உளுந்தூர்பேட்டை சுற்றியுள்ள 30-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது நிலத்தில் விளைந்த விளை பொருட்களை கொண்டுவந்து விற்பனை செய்வது வழக்கம். அவ்வாறு விற்பனை செய்யப்படும் பொருட்களுக்கு பணம் வழங்குவதிலும் மற்றும் கொண்டுவரும் தானியங்களை எடைபோட்டு சாக்கு மாற்றுவதிலும் அவ்வப்போது பிரச்சனைகள் ஏற்பட்டுவருகிறது.
அதேபோன்று, நேற்றும் பிரச்சனை ஏற்பட்டதால் விவசாயிகள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த வெள்ளிக்கிழமை உளுந்து ஒரு மூட்டை ரூ.6500 முதல் 7500 வரை விலை போனதாகவும், ஆனால் நேற்று ரூ.5500-க்கும் குறைவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டதாகவும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் எதிரே சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் விழுப்புரம் உளுந்தூர்பேட்டை சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவலறிந்து உளுந்தூர்பேட்டை டி.எஸ்.பி. விஜயகுமார், இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதன்பிறகு வேளாண்மை விற்பனை கூட அலுவலர்களை அழைத்துவந்து இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் போலீசார் உறுதியளித்ததன்பேரில் விவசாயிகள் கலைந்து சென்றனர்.
விவசாயிகள் ஏற்கனவே தொடர் மழை காரணமாக உள்ளே பச்சைப் பயிர்கள் அறுவடை செய்ய முடியாமல் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சியிருக்கும் பழைய பொருட்களை தற்போது அறுவடை செய்து கொண்டுவரும் தானியங்களை மிகவும் குறைவான விலைக்கு நிர்ணயம் செய்கிறார்கள். எனவே விவசாயிகள் கொண்டு வரும் உளுந்து, நெல், பருத்தி போன்ற விளை பொருட்களை தமிழக அரசு விவசாயிகளை பாதிக்காத வண்ணம் விலை நிர்ணயம் செய்து, கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் தரப்பில் கோரிக்கை வைத்துள்ளனர்.