நாடு முழுவதும் சில தினங்களுக்கு முன்பு நீட் தேர்வு நடந்து முடிந்ததுள்ளது. சுமார் 15 லட்சம் மாணவர்கள் இந்தியா முழுவதும் இந்தத் தேர்வை எழுதினார்கள். இந்நிலையில் நீட் தேர்வு காரணமாக ஒரே நாளில் தமிழகத்தைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள், இந்த விவகாரம் தமிழகத்தில் புயலைக் கிளப்பியுள்ளது. எதிர்க்கட்சிகள் நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்து அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளன.
இந்நிலையில், நீட்தேர்வில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தைச் சந்தித்த தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி, அவர்களுக்கு ஆறுதில் கூறி நிதி உதவி அளித்திருந்தார். இதற்கிடையே அவரின் இந்தச் செயலை ஆளும்கட்சியைச் சேர்ந்த சிலர் விமர்சனம் செய்தனர்.
இந்நிலையில், இதுதொடர்பாக ட்விட்டரில் காட்டமாக கருத்துத் தெரிவித்துள்ளார் உதயநிதி. அதில், "நீட் தேர்வைத் தடுக்கவும் மாட்டார்கள்; நீட்டால் இறந்த மாணவர் குடும்பங்களுக்கு ஆறுதல் சொல்லவும் மாட்டார்கள். கழகம் சார்பில் நான் ஆறுதல் சொல்லப்போனால் மட்டும் ‘அரசியல்’ என்பர். பாதிக்கப்பட்டவர்களைப் பார்ப்பது அரசியல் என்றால் அந்த அரசியலை நான் தொடர்ந்து செய்வேன்" என்று தெரிவித்துள்ளார்.