
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில், திமுக இளைஞரணிச் செயலாளரும் சேப்பாக்கம் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, நகரச் செயலாளர் பசீர் அஹமது, இளைஞரணி அமைப்பாளர் வழக்கறிஞர் ஹமீது சுல்தான் ஆகியோர் தலைமையில் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் ரத்த தான முகாமை துவக்கிவைத்தார்.
மேலும், ஏராளமான திமுக தொண்டர்கள் கலந்துகொண்டு ரத்த தானம் செய்தனர். ரத்த தான விழாவை முடித்துக்கொண்டு கீழக்கரை தாலுகா மருத்துவமனை ரொம்ப மோசமாக உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்த கருத்தின் அடிப்படையில், தாலுகா மருத்துவமனையைப் பார்வையிட்டார் காதர் பாட்சா. தொடர்ந்து பெய்த கனமழையால் மருத்துவமனை வளாகத்தின் உள்ளே பல இடங்களில் மழைநீர் வழிந்துகொண்டிருந்தது.

மேலும், மருத்துவமனை கட்டடமும் பல இடங்களில் இடிந்துவிழும் சூழ்நிலையில் மோசமாக இருந்தது. இதனையடுத்து, மருத்துவமனையில் இருந்தபடியே மாவட்ட ஆட்சியர் சங்கர் லால் குமாவத்தை செல்ஃபோனில் தொடர்புகொண்டு, கீழக்கரை தாலுகா மருத்துவமனை தொடர் மழையின் காரணமாக மிகவும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இதனை உடனடியாக சரி செய்து கொடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார் இதையடுத்து ஆட்சியரும் சரி செய்து கொடுப்பதாகச் சொன்னார்.
தாலுகா மருத்துவமனை தரமானதாக ஆகுமா அல்லது தரம் இல்லாமல் போகுமா என்பது போகப்போகத்தான் தெரியும்.