சென்னையில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசியிருந்தார். இவரது பேச்சு நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
மேலும், இந்த மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் சேகர்பாபு மீதும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த நிலையில், சென்னையைச் சேர்ந்த மகேஷ் உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ‘மாதவரம் பால் பண்ணை அருகே உள்ள அரங்கத்தில் திராவிட ஒழிப்பு மாநாட்டை நடத்த தனக்கு போலீஸார் அனுமதி வழங்கவில்லை. எனவே, அந்த மாநாட்டை நடத்த போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தது.
இது தொடர்பான வழக்கு நேற்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், “மக்கள் மத்தியில் கெட்ட எண்ணத்தை உருவாக்கும் வகையில் பிரச்சாரம் செய்ய நீதிமன்றத்தின் உதவியை நாட முடியாது. இதுபோன்ற கூட்டங்கள் நடத்துவதற்கு அடிப்படை உரிமை என்று மனுதாரர் கூறினாலும், மக்களின் நம்பிக்கைகளை ஒழிக்கும் விதமாக பிரச்சாரம் செய்ய இந்த நீதிமன்றம் அனுமதி வழங்காது.
சனாதன ஒழிப்பு மாநாட்டில் தமிழக அமைச்சர்கள் கலந்து கொண்டு பேசியது குறித்து இதுவரை எந்த வழக்குப்பதிவும் செய்யப்படவில்லை. இதன் மூலம் காவல்துறையினர் தங்கள் கடமையை செய்ய தவறிவிட்டது. அதிகாரத்தில் இருப்பவர்கள் பொது நிகழ்ச்சியில் பேசும்போது எந்தவித வேறுபாடு இல்லாமலும், கொள்கை ரீதியாக பிளவுபடுத்தாமலும் கவனத்துடன் பேச வேண்டும்” என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தார்.
நீதிமன்றம் கூறிய கருத்து தொடர்பாக நேற்று (06-11-23) செய்தியாளர்கள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதில் அளித்த அவர், “சனாதன கொள்கை குறித்து நான் பேசியது எந்த தவறும் இல்லை. நான் சொன்ன வார்த்தையில் இருந்து நான் பின்வாங்க மாட்டேன். எதுவாக இருந்தாலும் நான் அதை சட்டப்படி எதிர்கொள்வேன். அம்பேத்கர், பெரியார், திருமாவளவன் ஆகியோர் பேசியதை விடவும் நான் குறைவாகத்தான் பேசியுள்ளேன். நான் பேசியது சரிதான். அமைச்சர், எம்.எல்.ஏ, இளைஞர் அணி செயலாளர் ஆகிய பதவிகள் எல்லாம் இன்று வரும் நாளை போகும். ஆனால், நாம் முதலில் மனிதனாக இருப்பது தான் முக்கியம்” என்று கூறினார்.