Skip to main content

சேலத்தில் வழிப்பறி கும்பல் குண்டர் சட்டத்தில் கைது!

Published on 23/04/2019 | Edited on 23/04/2019


சேலத்தில் பட்டர்பிளை மேம்பாலம் அருகே தொடர்ந்து வழிப்பறி குற்றங்களில் ஈடுபட்டு வந்த நால்வர் மீது ஒரே நாளில் குண்டர் சட்டம் பாய்ந்தது.

 

s


சேலம் கொண்டலாம்பட்டி பட்டர்பிளை மேம்பாலம் அருகே முள்புதர் மண்டிக்கிடக்கிறது. இந்தப் பகுதியில், இரவு நேரங்களில் காதலர்களுடன் வரும் இளம்பெண்களை மடக்கி, அவர்களிடம் கத்தி முனையில் பணம், நகைகளை ஒரு கும்பல் பறித்து வந்தது.


இந்த கும்பல் கடந்த மார்ச் 22ம் தேதி நள்ளிரவில் காதலனுடன் வந்த இளம்பெண் ஒருவரிடம் நான்கரை பவுன் சங்கிலியைப் பறித்துக் கொண்டதோடு, அந்தப் பெண்ணையும் காதலனையும் அவர்களுக்குள் Ôலிப்லாக்Õ முத்தம் கொடுக்க வைத்து, அதை செல்போனில் படம் எடுத்து கலாட்டாவில் ஈடுபட்டுள்ளனர்.


இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த கொண்டலாம்பட்டி காவல்துறையினர், பெரிய புத்தூரைச் சேர்ந்த மணிகண்டன் (30), தினேஷ்குமார் (26), சுபாஷ் (27), இளங்கோவன் (28) ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். 


பிடிபட்ட கும்பல், மேலும் பலரிடம் கத்தி முனையில் நகை பறிப்பில் ஈடுபட்டுள்ளதும் தெரிய வந்தது. அப்போது அவர்களிடம் இருந்து 40 பவுன் நகைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.


இவர்களில், மணிகண்டன் மீது மல்லசமுத்திரம் காவல் நிலையத்திலும் வழிப்பறி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற குற்றங்களுக்காக கடந்த 2016ம் ஆண்டிலேயே ஒருமுறை மணிகண்டன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். 


இந்த கும்பலில் இளங்கோவன், தினேஷ்குமார், சுபாஷ் ஆகியோர் 26.3.2019ம் தேதி உத்தமசோழபுரம் அருகே சாமிநாதன் என்பவரிடம் கத்தி முனையில் 750 ரூபாய் பறித்த வழக்கும் உள்ளது. இந்த வழக்கில் அவர்கள் அப்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.


பிடிபட்ட நால்வரும் தற்போது சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பிணையில் வெளியே வந்தபோதெல்லாம் மீண்டும் வழிப்பறி, கொலை மிரட்டல் குற்றங்களில் ஈடுபட்டு வந்துள்ளது தெரிய வந்தது.


இதையடுத்து அவர்களால் சமூகத்திற்கு அச்சுறுத்தல் நிலவுகிறது என்பதால், அவர்கள் நால்வரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கொண்டலாம்பட்டி காவல் ஆய்வாளர் புஷ்பராணி, துணை ஆணையர் ஷியாமளாதேவி ஆகியோர் மாநகர காவல் ஆணையருக்கு பரிந்துரை செய்தனர். 


ஆணையர் சங்கர் உத்தரவிட்டதன்பேரில் மேற்கண்ட நால்வரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர்களுக்கு குண்டர் சட்ட கைது ஆணை திங்கள்கிழமை (ஏப்ரல் 22) சார்வு செய்யப்பட்டது.
 

சார்ந்த செய்திகள்