ஒரே பள்ளியில் பயின்று வந்த நான்கு மாணவிகளுக்கு டைபாய்டு காய்ச்சல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது திருவாரூரில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
திருவாரூர் தெற்கு வீதியில் செயல்பட்டு வரக்கூடிய ஜி.ஆர்.எம் அரசு உதவிபெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 4 மாணவிகளுக்கு அதிக அளவில் காய்ச்சல் ஏற்பட்டது. இதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட 16 உள் நோயாளிகளில் ஒரே பள்ளியைச் சேர்ந்த 4 மாணவிகளும் அடங்குவர். மேலும் இந்த ஒருவார காலத்தில் பத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர்.
மாணவிகள் அனைவருக்கும் டைபாய்டு காய்ச்சல் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவக் கல்லூரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீவிர சிகிச்சைப் பிரிவில் ஆறாம் வகுப்பு படிக்கக்கூடிய மாணவி ஒருவர் சிகிச்சை பெற்று வருகிறார். தொடர்ச்சியாக ஒரே பள்ளியைச் சேர்ந்த மாணவிகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டு வருவதால் பள்ளியின் குடிநீர் வசதிகளை ஆய்வு செய்ய மாவட்ட சுகாதாரத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.