காதல் விவகாரத்தில் நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதலில் உயிரிழந்த தஞ்சாவூர் மாவட்டத்தைச் சார்ந்த இருவரது உடல்களை கொலையாளிகள் துறையூர் பகுதிக்கு எடுத்துச் சென்று பாலங்களுக்கு கீழே வீசிச் சென்றது விசாரணையில் தெரிய வந்தது.
திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த கொத்தம்பட்டி குண்டாற்று பாலம் அருகில் நேற்று காலை சுமார் 40 வயது மதிக்கத்தக்க வாலிபர் வெட்டு காயங்களுடன் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதே போல் ஜம்புநாதபுரம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பொன்னுசங்கம்பட்டி கிராமத்தில் உள்ள ராயனேரி ஓடப் பாலத்தின் அடியில் இதே முறையில் சுமார் 45 வயது மதிக்க தக்க வாலிபர் ஒருவரும் பலத்த வெட்டுக்காயுடன் இறந்து கிடப்பது கண்டுபிடித்து இரண்டு உடல்களையும் மீட்ட போலீசார் துறையூர் அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக அனுமதித்து இறந்தவர்கள் யார் எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்று விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் துறையூர் அருகே இறந்தவர் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரத்தநாடு பகுதியில் உள்ள நெடுவகோட்டை எனும் கிராமத்தைச் சேர்ந்த காத்தலிங்கம் என்பவரது மகன் பிரபு (42) என்பதும், ஜம்பனாதபுரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் இறந்து கிடந்தவர் இளங்கோவன் மகன் ஸ்டாலின் என்பதும் அவரும் நெடுவகோட்டைப் பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. இது குறித்து விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார் ஒரத்தநாடு பகுதியில் உள்ள ஒரு பாலத்தின் அடியில் ரத்த கரையை கண்டுபிடித்தனர். அப்பொழுதுதான் துறையூர் பகுதியில் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்த இருவரையும் ஒரத்தநாடு பகுதியில் கொலை செய்து துறையூர் பகுதியில் குற்றவாளிகள் வீசி சென்றது தெரிய வந்தது.
இதனையடுத்து, ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்த ஹரி(22), சூர்யா(24) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதில், பிரபு என்பவர் கார் ஓட்டுநர் என்பதும், திருமணம் செய்து விவகாரத்து ஆகி தனியாக வசித்து வருவதாகவும் அப்பகுதியில் உள்ள ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும் அவரது உறவினர்கள் பிரபுவைக் கண்டித்ததாகவும் தெரிகிறது. ஆனால் பெண்ணின் நட்பை பிரபு விட மறுத்துள்ளார். இந்த நிலையில்தான் பிரபுவையும் அவரது நண்பர் ஸ்டாலினையும் பெண்ணின் உறவினர்கள் லாவகமாக கூட்டிச் சென்று தஞ்சாவூர் பகுதியில் கொலை செய்து, பிணத்தை திருச்சி மாவட்டம் துறையூரில் வீசி சென்றது தெரியவந்துள்ளது. காதல் விவகாரத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் - துறையூர் கொத்தம்பட்டி , பொன்னுசங்கம்பட்டி ஆகிய பகுதிகளுக்கிடையே உள்ள காவல் நிலையங்கள், சோதனைச் சாவடிகள் மற்றும் ரோந்து போலீசார் ஆகியவற்றை மீறி கொலையானவர்களின் உடல்களைக் குற்றவாளிகள் எடுத்துச் சென்றது எப்படி என துறையூர் பகுதி மக்கள் வியப்பில் அதிர்ச்சியிலும் கேள்வி எழுப்பியுள்ளனர்.