![Two-wheelers collided head-on! Two passed away](http://image.nakkheeran.in/cdn/farfuture/8vzgfx0UI1oSe_d4Uhq_zsaHrJnazZ29eolXIvCCico/1646739659/sites/default/files/inline-images/cop_173.jpg)
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள கடாரம் கொண்டான் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயக்குமார்(28) இவரது தங்கையான சஞ்சிதா(23). இருவரும் இன்று காலை தங்கள் ஊரிலிருந்து ஜெயங்கொண்டம் நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர்.
அதேபோல், ஜெயங்கொண்டம் அருகிலுள்ள சலுப்பை கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சித்குமார்(22), இவரது நண்பர் கௌதம்(23). இவர்கள் இருவரும் ஒரு இருசக்கர வாகனத்தில் ஜெயங்கொண்டத்தில் இருந்து எதிர் திசையில் கொண்டிருந்தனர். இந்நிலையில், புதுச்சாவடி அருகே மேற்படி இருவரது இருசக்கர வாகனமும் எதிர்பாராத விதத்தில் ஒன்றுக்கொன்று நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.
இதில் நால்வரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் பலத்த காயமடைந்த கௌதம், ஜெயக்குமார் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். சஞ்சிதா, ரஞ்சித்குமார் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் இருந்த இருவரையும் அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு வந்து சேர்த்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த ஜெயங்கொண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த கௌதம், ஜெயக்குமார் இருவரது உடலையும் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.