கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டுள்ளன. இந்த வைரஸ் தொற்று பரவாமல் இருக்க முதலில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு பிறப்பித்தது. மேலும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்தது மத்திய அரசு.
இருப்பினும் மக்கள் இருசக்கர வாகனங்களில் வெளியே செல்கின்றனர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், 'எதற்காக வெளியே செல்கிறீர்கள்' என்றால், 'மெடிக்கல் கடைக்கு போகிறோம், மளிகை பொருட்கள் வாங்க போகிறோம்' என ஏதாவது ஒரு காரணத்தை சொல்கிறார்கள். போலீசார் எவ்வளவோ அறிவுரைகள் சொன்னாலும் இருசக்கர வாகனங்களில் வெளியே வருவோர் எண்ணிக்கை குறையவில்லை. காரணமில்லாமல் வாகனங்களில் வெளியே வருவோரிடம் அபராதம் விதித்தாலும் வெளியே வருவோர் எண்ணிக்கை குறைந்தபாடில்லை.
இந்த நிலையில், நடந்து போய் வாங்கும் தூரத்தில் மளிகைக் கடை, மெடிக்கல் என எல்லாமே இருக்கிறது. அப்படி இருக்கும் போது பைக்கில் சுற்றும் நபர்களை மறித்து பைக்கை பறிமுதல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கால் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு உதவும் தன்னார்வலர்கள் காவல்நிலையத்தை அணுகி, அவர்களுக்கான பார் கோடு உள்ள பாஸ்களை பெற்றுக்கொண்டு பயணிக்கலாம் என்றும் இதைத் தவிர காரணமில்லாமல் பைக்கில் வெளியே வருபவர்களை தடுத்து நிறுத்தி பைக்கை பறிமுதல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாம். இதற்காக ஒவ்வொரு போக்குவரத்து காவல் ஆய்வாளரிடம் ஐந்து லாரிகள் கொடுக்கப்பட்டுள்ளதாம். தயார் நிலையில் உள்ள லாரிகளில் அந்த பைக்கை ஏற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது என்று மதுரை போலீசாரிடையே வாட்ஸ் அப்பில் இந்த தகவல் பரவி வருகிறது.