2000 ரூபாய் நோட்டுகள் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் செல்லாது என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. தற்போது புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகள் படிப்படியாகத் திரும்பப் பெறப்படும். டெபாசிட் மற்றும் இதர பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து செப். 30 ஆம் தேதி வரை 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகள் பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது. மேலும் 2000 ரூபாய் நோட்டுகளை விநியோகிப்பதை உடனடியாக நிறுத்துமாறும் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு, கடந்த 2016 ஆம் ஆண்டு புழக்கத்தில் இருந்த பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்து புதிதாக 2000 ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்தது. மேலும் நாட்டில் பதுக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை ஒழிக்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என பாஜக அரசு தெரிவித்தது. இந்த நிலையில் அக்டோபர் முதல் 2000 ரூபாய் நோட்டும் செல்லாது என்ற அறிவிப்பு பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் திருநெல்வேலி அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் அலுவலகம் சார்பில் நடத்துநர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், "ரிசர்வ் வங்கி கடந்த 19-ந் தேதி வெளியிட்டுள்ள அறிக்கையில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்ப பெறும் முடிவை அறிவித்து உள்ளது. இருப்பினும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் சட்டப்பூர்வமான இருக்கும். மேலும் வரும் செப்டம்பர் மாதம் 30 ஆம்தேதி வரை வங்கிகளில் இந்த ரூபாய் நோட்டுகளை கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ஒரு நாளைக்கு ஒரு நபர் அதிகபட்சமாக 20 ஆயிரம் ரூபாய் வரை வங்கியில் ஒருவர் மாற்றிக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதனால் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அரசு போக்குவரத்து கழகத்தால் வங்கியில் செலுத்த முடியாத நிலை உள்ளது. எனவே 23 ஆம் தேதி முதல் நடத்துநர்கள் பயணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் எடுத்துக் கூறி பயணிகளிடம் இருந்து 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வாங்குவதை தவிர்க்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் டிக்கெட் வசூல் தொகையை பிறரிடம் மாற்றம் செய்வதையும் தவிர்க்க வேண்டும். இது தொடர்பாக பொது மேலாளர்கள், அனைத்து கிளை மேலாளர்கள் தகுந்த அறிவுரை வழங்க வேண்டும். தினசரி ஒவ்வொரு கிளையிலும் நடத்துநர்களால் செலுத்தப்பட்ட வசூல் தொகையில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை குறித்த விவரங்களை மண்டல கணக்கு பிரிவு வாயிலாக மத்திய கணக்கு பிரிவுக்கு தெரியப்படுத்த வேண்டும்" என அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.