சேலத்தில் கஞ்சா விற்பனைக்கு எதிராக புகார் அளித்தவரும், புகாருக்கு உள்ளானவர்களும் காவல்நிலைய வாசலிலேயே கொடூரமாக தாக்கிக் கொண்ட வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அருகே கஞ்சா மற்றும் ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக புகார்கள் எழுந்தது. ஆட்டையாம்பட்டியைச் சேர்ந்த செந்தில், சத்யராஜ் ஆகிய இருவர் ஆட்டையாம்பட்டி, மல்லசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சா விற்பதாக ஊராட்சி மன்ற தலைவராக உள்ள கண்ணன் ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதுதொடர்பாக ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு இதுதொடர்பாக காவல் நிலையத்தில் ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன் மீண்டும் புகாரளித்த நிலையில் காவல் நிலையத்திற்கு வந்த ஏழு பேர் கொண்ட கும்பல் அங்கிருந்த கண்ணன் மற்றும் அவரது தரப்பைச் சேர்ந்தவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு அவர்களை தாக்கினர்.
அதேநேரம் கண்ணன் தரப்பினரும் அவர்களை தாக்கினர். இதனால் சிறிது நேரத்தில் காவல்நிலைய வளாகமே கலவரக்காடாக மாறியது. இந்த தாக்குதலில் அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் கண்ணனின் மண்டை உடைந்தது. இரண்டு பேர் படுகாயம் அடைந்த நிலையில் மூவரும் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். காவலர்கள் முன்னிலையில் கஞ்சா வியாபாரிகளும், புகார் சொன்னவர்கள் தரப்பும் மோதிக்கொண்ட சம்பவம் ஆட்டையாம்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதுதொடர்பான காட்சிகள் வெளியான நிலையில் போலீசார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.