தமிழகத்தில் கடந்த மே, ஏப்ரல் மாதங்களில் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இதனையடுத்து கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகத் தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக நீலகிரி மற்றும் கோயம்புத்தூரில் கடந்த ஒரு வாரமாக பல இடங்களில் கனமழை பொழிந்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து வருகிறது. சில இடங்களில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது.
இத்தகைய சூழலில் தான் கனமழை காரணமாக கோயம்புத்தூரில் ஏற்பட்ட இருவேறு சம்பவங்களில் சிக்கி மூவர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறை வட்டம், சோலையார் அணை, இடதுகரை பகுதியில் மழுக்குப்பாறை செக்போஸ்ட்டிலிருந்து பன்னிமேடு செல்லும் பொதுப்பணித் துறைச் சாலையின் அருகில் உள்ள வீட்டின் அருகே இன்று (30.7.2024) அதிகாலை சுமார் 4.00 மணியளவில் மண்சரிவு ஏற்பட்டது. அப்போது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த ஆறுமுகம் என்பவரது மனைவி ராஜேஸ்வரி என்கிற முத்து (வயது 57), சுகுணா என்பவரது மகள் தனப்பிரியா (வயது 15) ஆகிய இருவரும் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.
மேலும், கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி வட்டம், திப்பம்பட்டி கிராமத்தில் தனியருக்குச் சொந்தமான ஒட்டு வீட்டின் மேற்குப்பக்கச் சுவர் இன்று (30.07.2024) இரவு பெய்த மழையினால் அதிகாலை சுமார் 3.00 மணியளவில் இடிந்து மேற்குப்பக்க ஒட்டு வீட்டின்மீது விழுந்தது .இதில் வீட்டினுள் கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த அன்பழகன் என்வர் மகன் ஹரிஹரசுதன் (வயது 21) என்பவர் உயிரிழந்தார் என்ற செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.
இன்று அதிகாலை ஏற்பட்ட இந்த இருவேறு சம்பவங்களினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார். முன்னதாக தொடர் கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று (30.07.2024) ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதே போன்று தொடர் கனமழையால் கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் இன்று (30.07.2024) ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.