![two person passed away in a collision between a two-wheeler and a truck](http://image.nakkheeran.in/cdn/farfuture/qJ93EwQLuVLWlL41W3unzvhVgcHokWTCfvQMwcY9yYY/1670050535/sites/default/files/inline-images/995_94.jpg)
கரூர் தோகைமலை அருகே லாரியும், இருசக்கர வாகனமும் மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
கரூர் மாவட்டம் தோகைமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட பெருமாள் கவுண்டன்பட்டி பகுதியை சேர்ந்த ஆண்டி மகன் வடிவேலு மற்றும் வையாபுரி மகன் சின்னதுரை ஆகிய இருவரும் மரம் வெட்டும் தொழில் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று மரம் வெட்டுவதற்காக அவர்களது இருசக்கர வாகனத்தில் பாளையம்-தோகைமலை நெடுஞ்சாலையில் கன்னிமார் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது காரைக்கால் பகுதியில் இருந்து திண்டுக்கல் மாவட்டத்திற்கு நிலக்கரி ஏற்றி வந்த டிப்பர் லாரி நேருக்கு நேர் மோதியது.
இதில் இருசக்கர வாகனத்தில் வந்த வடிவேலு, சின்னதுரை ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். விபத்து குறித்து தகவல் அறிந்த தோகைமலை போலீசார், இருவரின் உடல்களையும் கைப்பற்றி மணப்பாறையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரண்டு மரம் வெட்டும் தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.