உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது
அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது. இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் காலை 9 மணி நிலவரப்படி 24.34 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
இந்த நிலையில் வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே செந்தாரப்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்கச் சென்ற சின்னபொண்ணு (77) என்ற மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்தார். அதேபோன்று, சேலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த பழனிசாமி(65) தனது மனைவியுடன் வாக்களிக்கச் சென்றபோது மயங்கி விழுந்து பலியானார். சேலம் மாநகரில் நடந்த இந்த துயர் சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.