தஞ்சை மாவட்டம், கீழவாசல் பகுதியில் அமைந்துள்ள அரசு மதுபானம் கடையான டாஸ்மாக் இயங்கி வருகிறது. இந்த டாஸ்மாக் பார் வசதியுடன் உள்ளது. இந்த மதுபான பாரில் பிளாக்கில் மதுவாங்கி அருந்திய இருவர் உயிரிழந்துள்ளனர்.
இந்த மதுபான கடைக்கு எதிரே மீன் மார்க்கெட் ஒன்று இயங்கிவருகிறது. இதில் வேலை செய்துவந்தவர் குப்புசாமி(60). இவர் பணியாற்றும் அதே மார்க்கெட்டில் விவேக்(35) என்பவரும் பணியாற்றிவந்தார். இவர்கள் இருவரும் இன்று காலை 11.30 மணி அளவில் மது கடை திறப்பதற்கு முன்பாக மதுபான பாரில் பிளாக்கில் மது வாங்கி அருந்தியுள்ளனர். இதில் குப்புசாமி மது அருந்திவிட்டு கடைக்கு வந்ததும் வாயில் நுரைதள்ளி மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
இந்நிலையில் சிறிது நேரத்தில் அவருடன் பிளாக்கில் மது வாங்கி குடித்த விவேக் என்பவரும் மார்க்கெட்டில் மயங்கி விழுந்துள்ளார். அவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு உடனடியாக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. இந்நிலையில் அவரும் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விவகாரம் தஞ்சை காவல்துறையினருக்கு தெரியவர தஞ்சை காவல்துறையினர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். அதேபோல், மாவட்ட நிர்வாகத்திற்கும் இந்த விவகாரம் தெரியவர சம்பவம் நடந்த அந்த மதுபான கடையில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் ஆய்வு செய்துவருகிறார். பொதுவாக காலை முதலே இந்த மதுபான பாரில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெறுகிறது என அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். அதேபோல், இன்றும் காலை முதல் அங்கு மது விற்பனை நடந்தது வந்ததாகவும், அதில் ஏராளமானோர் மது வாங்கி அருந்தியதாகவும் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் அதில் இருவர் இறந்திருப்பதால் காவல்துறையினர் தீவிரமாக விசாரித்துவருகின்றனர்.
சமீபத்தில் செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் கள்ளச்சாராயம் அருந்தி 22 பேர் உயிரிழந்த நிலையில், தஞ்சையில் அரசு மதுபான கடையில் மது அருந்திய இருவர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.