கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டத்துக்கு உட்பட்ட மந்தாரக்குப்பம் அடுத்த தெற்கு சேப்ளாநத்தம் மேற்கு தெருவைச் சேர்ந்த ராசாக்கண்ணு என்பவரது மகன் தங்கசாமி (55), அதேபோல் வினையறுத்தான் மகன் ஆதிமூலம் (60), வீரக்கண்ணு மகன் அஞ்சாப்புலி இவர்கள் 3 மூன்று பேரும் பிணம் எரியூட்டும் தொழில் செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் நேற்று மாலை வடக்கு சேப்ளாநத்தம் காமராஜ் நகர் பகுதியைச் சேர்ந்த வெங்கடாசலம் என்பவர் உயிரிழந்த நிலையில், அவரின் உடலை வீணங்கேணி பகுதியில் உள்ள சுடுகாட்டில் எரியூட்டும் வேலையை செய்து கொண்டிருந்தனர். அப்பொழுது சுடுகாட்டின் அருகில் அமைக்கப்பட்டுள்ள ரயில்வே இருப்புப் பாதையில், அமர்ந்து பேசிக்கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. அப்பொழுது திருச்சியில் இருந்து, விருத்தாசலம் வழியாக கடலூர் நோக்கி செல்லக்கூடிய பயணிகள் ரயில் வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக ரயில் இவர்கள் மீது மோதியது.
இந்த விபத்தில் தங்கசாமி, ஆதிமூலம் இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் அஞ்சாப்புலிக்கு கை,கால், தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தகவலறிந்து வந்த ரயில்வே காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் படுகாயமடைந்த அஞ்சாப்புலியை கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரயில் மோதிய விபத்தில் இரண்டு நபர்கள் உயிரிழந்திருப்பது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.