விழுப்புரம் - கடலூர் மாவட்டம் இடையே தென்பெண்ணையாற்றில் தாளவனூர் ஏனாதிமங்கலம் இடையே 25 கோடியில் கட்டப்பட்ட தடுப்பணை, கடந்த 23ஆம் தேதி உடைந்தது. தரமில்லாமல் கட்டப்பட்ட தடுப்பணை உடைந்ததைக் கண்டித்து திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி, மாவட்டச் செயலாளர் புகழேந்தி, கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் கணேசன் எம்எல்ஏ மற்றும் திமுகவினர், விவசாயிகள் ஆகியோர் அணை உடைந்த பகுதியில் பெரும் போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு தலைமை பொறியாளர் அசோகன், கண்காணிப்பு பொறியாளர் சுரேஷ், செயற்பொறியாளர் ஜவகர், உதவிப் பொறியாளர் சுமதி ஆகிய 4 பேரை கடந்த 25ஆம் தேதி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டனர்.
இதைத் தொடர்ந்து உதவிப் பொறியாளர்கள் தனசேகர், ஜெகதீசன் ஆகிய இருவரையும் தற்காலிக பணிநீக்கம் செய்து பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி உத்தரவிட்டுள்ளார். இதுவரை இந்தத் தடுப்பு அணை உடைந்த விவகாரத்தில் 6 பொதுப்பணித்துறை அதிகாரிகள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.