திண்டுக்கல் மாவட்டம், மேட்டுப்பட்டி பகுதியில் காளியம்மன் கோவில் அருகே மாநகராட்சி சார்பில் ஒரு குப்பைத்தொட்டி வைக்கப்பட்டுள்ளது. நேற்று காலை, அந்தக் குப்பைத் தொட்டியைச் சுற்றிலும் தெருநாய்கள் சூழ்ந்து நின்று கொண்டிருந்தன. மேலும், அந்த தெருநாய்கள் எதையோ கடித்துக் கொண்டிருந்தன. இதற்கிடையில், அந்தக் குப்பைத்தொட்டியில் உள்ள குப்பைகளை எடுப்பதற்காக தூய்மைப் பணியாளர்கள் அந்த இடத்திற்கு வந்தனர். அப்போது, குப்பைத்தொட்டியில் இருந்து இரண்டு தெருநாய்கள் எதையோ கவ்விக்கொண்டு ஓடியதையும், மேலும் சில நாய்கள் அந்த குப்பைத்தொட்டியைச் சுற்றி வருவதையும் தூய்மைப் பணியாளர்கள் பார்த்தனர். உடனே, அங்கு விரைந்து சென்ற தூய்மைப் பணியாளர்கள் அந்த நாய்களை விரட்டினர். அதன் பின்னர், அவர்கள் அந்த குப்பைத்தொட்டியை பார்த்தபோது அங்கு இரண்டு பெண் சிசுக்களின் உடல்கள் இருந்தன. அதில் ஒரு சிசுவின் தலை இல்லாமல் இருந்தது.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த தூய்மை பணியாளர்கள் இது குறித்து அருகில் இருக்கும் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதை அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அங்கு வந்த காவல்துறையினர், குப்பைத்தொட்டியில் இருந்த இரண்டு பெண் சிசுக்களின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அவர்கள் நடத்திய முதற்கட்ட விசாரணையில், குப்பைத்தொட்டியில் இருந்த இரட்டை பெண் சிசுக்கள் குறைப் பிரசவத்தில் பிறந்து இறந்துள்ளது. அந்த சிசுக்களின் உடல்களை யாரோ சாக்குப்பையில் போட்டு குப்பைத்தொட்டியில் வீசிச் சென்றுள்ளார்கள் என்று காவல்துறையினருக்குத் தெரியவந்தது. மேலும், இறந்த சிசுக்களின் ஒன்றின் தலையைத் தெருநாய்கள் கடித்து கவ்வி சென்றதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதற்கிடையில், குப்பைத்தொட்டியில் சிசுக்களின் உடல்களை வீசி சென்ற நபர் குறித்த விசாரணையில் காவல்துறையினர் ஈடுபட்டனர். அந்த விசாரணையின் அடிப்படையில், அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராக்களை காவல்துறையினர் ஆய்வு செய்தனர். அதில், அதிகாலை நேரத்தில் ஒரு பெண் சாக்குப்பையுடன் குப்பைத்தொட்டி அருகே வருவதும், பின்னர் அந்த சாக்குப்பையைத் குப்பைத்தொட்டியில் வீசி செல்லும் காட்சிகளும் பதிவாகி இருந்தன. ஆனால், அந்த காட்சிகளில், அந்த பெண்ணின் முகம் சரிவர பதிவாகவில்லை.
இதைத் தொடர்ந்து, அந்தப் பெண் யார்? அவர் தான் இந்த சிசுக்களின் தாயா? என்று பல கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.