தருமபுரி மாவட்டம் மாரப்பநாயக்கன்பட்டியில் புவனேஷ்வரன் என்பவரின் விவசாய நிலத்தில் விவசாயப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த விவசாயப் பணிகளில் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த பட்டியலின வகுப்பைச் சேர்ந்த 5 முதிர்ந்த வயது பெண்கள் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இந்த நிலையில், நிலத்தின் உரிமையாளரின் மனைவி தாரணி மற்றும் தாய் சின்னத்தாய் இருவரும் விவசாயப் பணிகள் செய்த அந்த 5 பேருக்கும் தேநீர் வாங்கி வந்து கொட்டாங்குச்சியில் கொடுத்துள்ளனர். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் சம்பவத்தினை தங்களது செல்போனில் படம்பிடித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர்.
இது பெரும் சர்ச்சையான நிலையில், அந்த 5 பேரில் ஒருவர் காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார். அதனடிப்படையில் சாதிய பாகுபாடு பார்த்ததாக வன்கொடுமை சட்டத்தின் கீழ் தாரணி மற்றும் சின்னத்தாய் இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.