Skip to main content

மில் உரிமையாளர் வீட்டில் 35 பவுன் நகை கொள்ளை!

Published on 22/02/2021 | Edited on 22/02/2021

 

Two lakh cash and jeweleries looted from mill owner's house

 

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகில் உள்ளது ஆலத்தூர். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் பன்னீர் என்பவரது மகன் குமார்(35). இவர் அதே பகுதியில் ரைஸ்மில் வைத்து நடத்திவருகிறார். இவருடைய 2வயது குழந்தைக்கு உடல்நிலை சரி இல்லாமல் இருந்துள்ளது. இதற்காக இரண்டு நாட்களுக்கு முன் புதுவை அரசு மருத்துவமனைக்கு கணவன் மனைவி இருவரும் வீட்டை பூட்டிவிட்டு குழந்தையைக் கொண்டுசென்று மருத்துவமனையில் சிகிச்சை அளித்துவந்துள்ளனர்.

 

இவர்கள் வீட்டின் அருகில் குமாரின் தந்தை வீடு தனியாக உள்ளது. அந்த வீட்டில் குமாரின் தந்தை மற்றும் அவரது தாய் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் வழக்கம் போல் நேற்று காலை வீட்டிலிருந்து வெளியே  எழுந்து வந்து பார்த்தபோது பூட்டப்பட்டு இருந்த குமார் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனே, வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 35 பவுன் நகைகள், 2 லட்சம் பணம் மற்றும் ஒரு கிலோ வெள்ளி ஆகிய பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. குமாரும் அவரது மனைவியும் வீட்டில் இல்லாத சமயத்தைப் பயன்படுத்தி இந்த கொள்ளை நடந்துள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

 

கொள்ளையடிக்கப்பட்ட பணம், நகை மதிப்பு 14 லட்சம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து மரக்காணம் காவல்நிலையத்திற்குத் தகவல் அளித்துள்ளனர். அங்கிருந்து விரைந்து வந்த சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் விழுப்புரத்தில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. கொள்ளை நடந்த இடத்தில் தடையங்கள் அனைத்தும் சேகரிக்கப்பட்டன. 2 கிலோ மீட்டர் தூரம் வரை சென்றும் மோப்பநாய் ராக்கி யாரையும் பிடிக்கவில்லை. இச்சம்பவம் மரக்காணம் பகுதி மக்களிடம் பெரும் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்