குமரி மாவட்டம், முட்டம் தூய குழந்தை ஏசு தெருவைச் சேர்ந்தவர் ஆன்றோ சகாயராஜ் (54). துபாயில் ஸ்டார் ஓட்டல் ஒன்றில் சூப்பர் வைசராக இருக்கிறார். இவரது மனைவி பவுலின் மேரி (48) வீட்டில் தையல் பயிற்சி நடத்தி வந்தார். இவர்களுடைய மகன்களில் மூத்த மகன் ஆலன், தந்தையுடன் பணிபுரிந்து வருகிறார். இளைய மகன் சென்னையில் படித்து வருகிறார். பவுலின் மேரி தனியாக இருப்பதால் அவருக்கு துணையாக தன்னுடைய தாய் தெரசம்மாள் (90) உடன் வசித்து வந்தார்.
நேற்று 7-ம் தேதி பவுலின் மேரியின் வீடு காலையில் திறக்கப்படாமல் வெகு நேரமாக பூட்டி கிடந்ததால், மாலை 3 மணியளவில் சந்தேகமடைந்த உறவினர்கள் கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, ஹாலில் பவுலின் மேரியும் தெரசம்மாளும் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தனர். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் வெள்ளிச்சந்தை போலீசில் தகவல் கொடுத்தனர்.
உடனே நெல்லை சரக டி.ஐ.ஐி பிரவேஷ்குமார், எஸ்.பி ஹரிகிரண் பிரசாத் மற்றும் போலீசார் மோப்ப நாய் ஏஞ்சலுடன் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
கொலை குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார் கூறும் போது, தாயும் மகளையும் கொலை செய்து விட்டு அவர்கள் அணிந்திருந்த 15 பவுன் நகைகளையும் கொள்ளையடித்து சென்று இருக்கிறார்கள்.
6-ம் தேதி தாயும் மகளும் உறவினர் ஒருவரின் துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு இரவு 10 மணிக்கு தான் வீட்டுக்கு வந்து இருக்கிறார்கள். அவர்களை பின் தொடா்ந்து வந்த கொலையாளிகள், வீட்டின் மின் இணைப்பை துண்டித்து வீட்டுக்குள் புகுந்து இருவரையும் கொலை செய்து விட்டு அதன் பிறகு வீட்டை வெளியில் இருந்து பூட்டி விட்டு சென்று இருக்கலாம் என தெரிகிறது. வீட்டுக்குள் மின் இணைப்பு வரக்கூடிய பெட்டி உடைக்கப்பட்டு இருக்கிறது.
மேலும் அயன் பாக்ஸ் ஓன்று ரத்தக்கறையுடன் அருகில் உள்ள தென்னந்தோப்பில் கிடந்தது. தலையில் அடித்து தான் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள். இதனால் கொலைக்கு அயன் பாக்ஸை பயன்படுத்தியிருக்கலாம். இந்த கொலையை ஒருவர் மட்டும் இல்லாமல் கூட்டாக சோ்ந்து தான் செய்து இருக்கிறார்கள். தாயும் மகளும் பல ஆண்டுகளாக தனியாக இருந்து வருவதை தெரிந்து அதை கண்காணித்து இந்த கொலையில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.
இந்த வீட்டை சுற்றி வீடுகள் எதுவும் இல்லாததால் கொலையாளிகளுக்கு அது வசதியாக இருந்துள்ளது. இந்த நிலையில் மேலும் பல்வேறு கோணங்களில் விசாரித்து கொலையாளிகளை தேடி வருகிறோம். இதற்காக இரண்டு டி.எஸ்.பிக்கள் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது என கூறினார்கள். ஏஞ்சலின் மோப்ப நாயும் சுமார் 2 கி.மீ தூரத்துக்கு முட்டம் கலங்கரை விளக்கம் வரை ஓடி சென்று திரும்ப வந்தது.
தாயும் மகளும் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.