புதுச்சேரியில் மின்கட்டண பாக்கி வைத்துள்ளவர்களின் பட்டியலை நேற்று முன்தினம் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி வெளியிட உத்தரவு பிறப்பித்திருந்தார். அதன்படி மின்கட்டணம் பாக்கி வைத்துள்ளவர்களின் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதனை அடுத்து இரண்டு நாட்களில் மட்டும் புதுச்சேரியில் மின் கட்டண பாக்கி வைத்துள்ள 117 கோடியில் இரண்டரை கோடி வசூலாகியுள்ளது. மேலும் விரைந்து மின்கட்டன பாக்கி வசூலிப்பது தொடர்பாக துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தலைமையில் மின் பொறியாளர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த துணை நிலை ஆளுநர் கிரண்பேடி,
"அனைவரும் அரசுக்கு செலுத்த வேண்டிய வரி மற்றும் பாக்கி கட்டணங்களை செலுத்திட வேண்டும். நிலுவையிலுள்ள கட்டணங்களை செலுத்தினாலே புதுச்சேரி மாநிலத்திற்கு தேவையான நிதி கிடைத்துவிடும். நிதிக்காக மத்திய அரசை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டிய நிலை இருக்காது" என்றார்.
மேலும் எனக்கு அதிகாரமில்லை என்று கூறுபவர்களுக்கு நான் கூறுவது என்னவென்றால், புதுச்சேரியை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல எனக்கு அதிகப்படியான பொறுப்புகள் உள்ளதாகவும், அதிகாரம் என்பது மின்சாரம் கிடையாது என்றும், அரசு அதிகாரத்திலுள்ளவர்களுக்கு அதிக பொறுப்புகள் உள்ளதாகவும் அந்த வகையில் எனக்கு அதிகப்படியான பொறுப்புகள் உள்ளது. அதில் மிகப்பெரியது புதுச்சேரி மக்களுக்கு சேவை செய்வதும், சராசரி மனிதனுக்கு நீதியை பெற்று தருவதும், வளர்ச்சி, சட்ட ஒழுங்கு போன்றவைகளை பாதுகாப்பதும் ஆகும். எனக்கு யாராவது அதிகாரம் இல்லை என்று சொன்னால் என்னிடம் நேரிடையாக சந்தித்து பகிர்ந்து கொள்ளவும் எனவும் ஆளுநர் கிரண்பேடி தெரிவித்தார்.