
கரோனா பரவல் காரணமாக திருச்சி விமான நிலையத்திலிருந்து மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய், அபுதாபி, இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு சிறப்பு மீட்பு விமானங்கள் இயக்கப்பட்டு வந்தது. தற்போது நாடு முழுவதும் கரோனா கட்டுப்பாடுகள் விலக்கிக்கொள்ளப்பட்டு உள்ளதையடுத்து சிறப்பு விமானங்கள் ரத்து செய்யப்பட்டு தினசரி விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் தங்கள் உடைமைகள் மற்றும் உடைகளில் தங்கத்தை மறைத்து கடத்தி வருவது வாடிக்கையான ஒன்றாக இருந்து வருகிறது. சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி தங்கம் கடத்துவதை தடுப்பதற்கான வழிமுறைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு வந்த விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து அந்த விமானத்தில் வந்த பயணிகளை சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது இந்த விமானத்தின் ஊழியரான சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த வினோத் குமார் மற்றும் அந்த விமானத்தில் பயணம் செய்த நாகப்பட்டினத்தைச் சேர்ந்த பக்ருதீன் ஆகிய இருவரும் சுமார் 2 கிலோ பேஸ்ட் வடிவிலான தங்கத்தை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அவர்கள் இருவரையும் கைது செய்து தொடர் விசாரணை மேற்கொண்டனர். மேலும் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு 1 கோடி ரூபாய் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருவரிடமும் தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு பின் அவர்கள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.