திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கன்னிகாபுரம், தார்வழி பகுதியைச் சேர்ந்தவர் 54 வயதான ஜெயக்குமார். அதே பகுதியைச் சேர்ந்தவர் 33 வயதான வெங்கடேசன். இருவரும் அதே பகுதியில் உள்ள யாகவேந்திரா முதலியார் என்பவருக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் கடந்த ஒரு வருட காலமாக குத்தகை எடுத்து விவசாயம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இரவு நேரங்களில் வனப்பகுதியில் இருந்து வரும் காட்டு மாடுகள் மற்றும் காட்டுப் பன்றிகளை விரட்ட தினமும் சென்று வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் வழக்கம்போல் நிலத்திற்குச் சென்றபோது, செல்லும் வழியில் உள்ள ராமமூர்த்தி மற்றும் மணி என்பவருக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் காட்டுப் பன்றிகளை வேட்டையாட சுமார் 300 மீட்டர் தூரம் வைக்கப்பட்டிருந்த சட்டவிரோத மின் வேலியில் சிக்கி மின்சாரம் தாக்கி ஜெயக்குமார் மற்றும் வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவல் அறிந்த ஆம்பூர் நகர போலீசார் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு அதே பகுதியைச் சேர்ந்த நில உரிமையாளர் மணி அவரது மகன்கள் கோபி, வினோத் மற்றும் நடராஜன் ஆகியோரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.