நாமக்கல்லில், சிறப்பு ஆசிரியர்களுக்கு மானிய ஊதியம் வழங்க இரண்டரை லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதான மாற்றுத்திறனாளிகள் நல அதிகாரிகள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
நாமக்கல் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நல அதிகாரியாக பணியாற்றி வந்தவர் ஜான்சி. இதே அலுவலகத்தில், இளநிலை மறுவாழ்வு அதிகாரியாக பணியாற்றி வந்தவர் சேகர்.
குமாரபாளையத்தில் செயல்பட்டு வரும் ஸ்ரீ கம்பத்துக்காரர் சிறப்புப் பள்ளியில் சிறப்பு ஆசிரியர்களாக பணியாற்றி வருவோருக்கு அரசு ஒதுக்கிய 5 லட்சம் ரூபாய் மானிய ஊதியத்தை அனுமதிக்க வேண்டுமானால் 2.50 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுக்க வேண்டும் என ஜான்சியும் சேகரும் கேட்டுள்ளனர்.
இதுகுறித்து சிறப்புப் பள்ளியின் தாளாளர் விஜயகுமார், நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புப்புத்துறையில் புகார் அளித்தார். அவர்கள் வகுத்துக் கொடுத்த திட்டப்படி, விஜயகுமார் லஞ்சப் பணத்தைக் கொடுத்தபோது சேகர் பெற்றுக்கொண்டார். அந்தப் பணத்தை எடுத்துக்கொண்டு சேகர், ஜான்சி வீட்டுக்குச் சென்று அவரிடம் கொடுத்தார். அவர்கள் இருவரும் தங்களுக்கு உரிய பங்கை பிரித்துக்கொண்டபோது, அவர்களைப் பின்தொடர்ந்து சென்ற லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
இதையடுத்து, அரசுப் பணியாளர்கள் நடத்தை விதிகளின்படி, லஞ்ச வழக்கில் கைதான ஜான்சி, சேகர் ஆகிய இருவரும் அதிரடியாக பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர். இதற்கான உத்தரவை, தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையர் ஜானி டாம் வர்கீஸ் பிறப்பித்துள்ளார்.