நட்பு என்பது ஜாதி, மதம், மொழி, இனம் கடந்தது. உறவுகளைக் கடந்த நட்பு பலரிடமும் மேலோங்கி உள்ளது. அதற்கு உதாரணமாக இணைபிரியாத நீண்ட கால நண்பர்கள் இறப்பிலும் இணைபிரியாமல் மறைந்துள்ளனர் என்பது வியப்பாகப் பேசப்படுகிறது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகரிலுள்ள ஜூப்ளி சாலை பகுதியில் முஸ்லிம்களுக்கு சொந்தமான பள்ளிவாசல் உள்ளது. அதன் அருகில் வசித்து வந்தவர் 78 வயது மகாலிங்கம். இவர் அப்பகுதியில் உள்ள காளியம்மன் கோவில் பூசாரியாகவும் இருந்து வந்துள்ளார்.
அதோடு தனது வீட்டருகே டீக்கடையும் வைத்து நடத்தி வந்துள்ளார். இவரது வீட்டின் எதிர் வீட்டில் வசித்து வந்தவர் முஸ்லீம் மதத்தைச் சேர்ந்த ஜெயினுலாபுதீன் வயது 66. இவர் ரைஸ் மில் வைத்து நடத்தி வந்துள்ளார். இவர்கள் இருவரும் நீண்ட காலமாக நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சுமார் 45 ஆண்டுகளாக நெருங்கிய நண்பர்களாகப் பழகி வந்துள்ளனர். இவர்கள் குடும்பங்களில் நடக்கும் நல்லது, கெட்டது அனைத்திலும் இருவரும் தவறாமல் பங்குகொள்வார்கள்.
இந்த நண்பர்கள் இருவரும் தினசரி சந்திக்காத நாளே இல்லை. அப்படிப்பட்ட இவர்கள் இருவருக்கும் சில நாட்களுக்கு முன்பு ஒரே காலகட்டத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கடந்த சில நாட்களாக இருவரும் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அடுத்தடுத்து படுக்கையில் தங்கி சிகிச்சை பெற்று வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை அரை மணி நேர இடைவெளியில் இருவரும் மரணத்தை தழுவியுள்ளனர். இது இரு குடும்பத்தினரிடம் மட்டுமல்ல அப்பகுதியில் உள்ள மக்களிடமும் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
40 ஆண்டுகளுக்கு மேலாக மதங்களைக் கடந்து நெருங்கிய நண்பர்கள் இருவரும் சாவிலும் இணைபிரியாதது எல்லோருக்கும் கண்களில் கண்ணீரை வர வழைத்துவிட்டது. இருவரது உடலுக்கும் இரு மதத்தினரும் கண்ணீர் அஞ்சலி செலுத்தி அடக்கம் செய்துள்ளனர். நட்புக்கு மதம், சாதி, இனம், மொழி என எந்த எல்லையும் இல்லை என்பதை இருவரும் எடுத்துக் காட்டி மறைந்துள்ளனர் என்கிறார்கள் ஜெயங்கொண்டம் பகுதி மக்கள்.