கடலூர் மாவட்டம், பெண்ணாடம் ரயில்வே மேம்பாலம் அருகே ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக குற்ற நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் நுண்ணறிவு காவல் பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெரால்டு ராபின்சன், காவலர் ராஜசேகர் ஆகியோர் நேற்று முன்தினம் (15.12.2021) நள்ளிரவு அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அவ்வழியாக வந்த ஒரு டாடா ஏஸ் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், பல மூட்டைகளில் ரேஷன் அரசி இருப்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அவ்வண்டியின் ஓட்டுநர் மற்றும் உடன் இருந்த ஒருவரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர்கள், விருத்தாசலத்தை அடுத்த கோமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பாலா (20), மற்றும் அரியலூர் மாவட்டம் சோழன்குடிகாடு கிராமத்தைச் சேர்ந்த பழனிவேல் (60) என்பதும் தெரியவந்தது. இருவரும் பெண்ணாடம் சுற்றுவட்டார கிராமப் பகுதியில் பொதுமக்களிடம் ரேஷன் அரிசியை வாங்கி அரியலூர் மாவட்டத்திற்குக் கடத்துவதும் தெரியவந்தது.
இதையடுத்து குற்ற நுண்ணறிவு பிரிவு போலீசார், பாலா (டாடா ஏஸ் டிரைவர்) மற்றும் பழனிவேல் இருவரையும் பிடித்தனர். மேலும், 3,000 கிலோ அரிசி மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். அவர்களை பெண்ணாடம் காவல் நிலையத்தில் ஒப்படைத்து, பின்னர் கடலூர் மாவட்ட குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு போலீசிடம் ஒப்படைத்தனர். அவர்கள் இருவரையும் கைது செய்து, வழக்குப் பதிந்து விசாரணை நடத்திவருகின்றனர்.