கும்பகோணம் பகுதிகளில் ஒரு வார காலமாக பல்வேறு பிரச்சினைகளுக்கு இடையே நடந்து வந்த கூட்டுறவு கடன் சங்கங்களுக்கான தேர்தல் அதிமுக, அமமுக கட்சிகளுக்கு இடையே மோதல் வெடித்ததால் சில இடங்களில் தேர்தலை நிறுத்தியுள்ளனர்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ஒன்றியம் உடையாளூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நடந்த ஓட்டுப்பதிவில் அதிமுக, திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் ஓட்டுப்போட்டு வந்தனர். திடிரென ஓட்டுப்பதிவு நடந்த சங்க அலுவலகம் முன்பு அமமுகவினர் திரண்டனர். பதட்டமானதை உணர்ந்த காவல்துறை காக்கிகளை குவித்தனர்.
காவல்துறை கணித்தது போலவே, " ஓட்டுப்பதிவில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக அமமுகவினருக்கும், அதிமுகவினருக்கும் இடையே திடீரென்று தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் போலீசார் முன்னிலையிலேயே இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் கல்வீசி தாக்கி கொண்டனர். பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டதால் போலீசார் இரு தரப்பினருக்கும் இடையே சமரசம் செய்து விலகிவிட்டனர்.
பின்னர் பேச்சுவார்த்தை நடத்தினர் இதில் உடன்பாடு ஏற்படவில்லை. மேலும் அதிமுகவினர் ஓட்டுப்பதிவை நிறுத்திவிட்டு தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர். இதையடுத்து தேர்தல் அதிகாரியான தமிழ்செல்வி ஓட்டுப்பதிவின் போது கலவரமும் கைகலப்பும் ஏற்பட்டதாலும், தேர்தலை நிறுத்தி வைக்குமாறு அதிமுக, திமுக ஆகிய இரண்டு முக்கிய கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் சார்பில் கடிதம் கொடுத்ததாகவும் மறு தேதி எதுவும் குறிப்பிடாமல் தேர்தலை ஒத்தி வைப்பதாக தெரிவித்தார்.
தமிழகமே தண்ணீர் பிரச்சனையில் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. பள்ளி கல்லூரிகளுக்கு தேவையான ஆசிரியர்கள், பாட நூல்கள் வழங்கப்படாமல் மாணவ மாணவிகள் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். எட்டாவது ஆண்டாக குறுவை சாகுபடி பொய்த்துவிட்டது, சம்பா சாகுபடியாவது கைகொடுக்குமா என்கிற கவலையில் விவசாயிகள் கண் கலங்கி நிற்கிறார்கள். ஹைட்ரோ கார்பன், மீத்தேன், உள்ளிட்ட திட்டங்களால் டெல்டா பாலைவனமாகா போகிறதோ என்கிற கவலையில் போராட்டத்தில் சமூக ஆர்வலர்கள் களத்தில் குதித்து போராடிவருகிறார்கள். இதையெல்லாம் பிரச்சனையாக எடுத்துக்கொள்ளாத அதிமுக கூட்டுறவு சங்க தேர்தல்களில் கோஷ்டிப் பூசலை ஏற்படுத்திக்கொண்டு கலவரத்தை ஏற்படுத்தி வருவது பலரையும் முகம் சுளிக்கவே வைத்திருக்கிறது.