Skip to main content

போலி மதுபானம் கடத்திய இருவர் கைது-பண்ருட்டி பகுதியில் கஞ்சா விற்ற 9 பேர் கைது!

Published on 29/08/2021 | Edited on 29/08/2021

 

Two arrested for  fake liquor - 9 arrested for selling cannabis in Pantrudi area!

 

புதுச்சேரி மாநித்திலிருந்து தமிழகப் பகுதியான கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மதுபான கடைகளுக்கு தமிழக அரசு லேபிள்கள் ஒட்டிய போலி மதுபானங்கள் அடிக்கடி கொண்டு வருவதாக கடலூர் மாவட்ட காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து மாவட்ட காவல்  கண்காணிப்பாளர் சக்திகணேசன் உத்தரவின் பேரில், மாவட்ட மதுவிலக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் மற்றும் ஆய்வாளர்களுடன் 2 நாட்களாக பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.  

 

நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது புதுச்சேரி மாநிலத்திலிருந்து கடலூர்  கஸ்டம்ஸ் சாலை வழியாக பண்ருட்டி நோக்கி ஸ்கார்பியோ வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதை மதுவிலக்கு போலீசார் மறித்து சோதனை செய்தபோது, அதில் தமிழ்நாடு அரசு டாஸ்மாக் லேபிள்கள் ஒட்டிய போலி மதுபாட்டில்கள் 25-க்கும் மேற்பட்ட அட்டைப்பெட்டிகளில் 1,450 மதுபாட்டில்கள் இருப்பது தெரியவந்தது.  மேலும் அதனுடன் 100 லிட்டர் கள்ளச்சாராயமும் இருந்தது.

 

அதையடுத்து மதுவிலக்கு போலீசார் பண்ருட்டி மதுவிலக்கு பிரிவுக்கு கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டனர். அதில் போலி மதுவை கடத்தியது திருக்கோவிலூரை சேர்ந்த குமார், புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த சுதாகர் என தெரியவந்தது. இருவரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்களிடமிருந்து ரூபாய் 2 லட்சம் மதிப்பிலான போலி மதுபானங்கள், 100 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் காரையும் பறிமுதல் செய்து, வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 

இதேபோல் பண்ருட்டி அருகில் புதுப்பேட்டை மற்றும் சுற்று வட்டார பகுதியில் அதிகளவில் இளைஞர்கள் கஞ்சா போதைக்கு அடிமையாகி சீரழிந்து வருவது காவல்துறைக்கு தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து பண்ருட்டி, புதுப்பேட்டை பகுதியில் போலீசார் தீவிர கஞ்சா வேடையில் ஈடுபட்டனர். புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் நடத்திய கஞ்சா வேட்டையில் ஒறையூர் கணேஷ் (22), கரும்பூர்குச்சிபாளையம் அருண் (21) ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் கஞ்சா வியாபாரியான விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த அன்றாயநல்லூர் அண்ணா நகர் குப்பன் (61) என்பவனை கைதுசெய்து சிறையில் அடைத்தனர். இதேபோல பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரன், சப் இன்ஸ்பெக்டர் தீபன் ஆகியோர் நடத்திய கஞ்சா வேட்டையில் பண்ருட்டி திருவள்ளுவர் நகர் தனபால் (45), மாளிகைமேடு காலனி கோலியனூரான்(61), ராஜ்கண்ணு(47), எம்.புதுப்பாளையம் மண்ணாங்கட்டி (72), வீரப்பன்(50) ஆகியோர் கைது செய்ப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

முத்தாண்டிக்குப்பம் பகுதியில் காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் தவச்செல்வன் ஆகியோர் நடத்திய வேட்டையில் முடப்பள்ளி காலனி அன்பு (36) என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பண்ருட்டி பகுதியில் கடந்த 10 நாட்களில் ஏராளமான கஞ்சா ஆசாமிகள் கைதாகி சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்