கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது பாளையங்கோட்டை வடக்குபாளையம். இங்கிருந்து கானூர் செல்லும் சாலையில் அரசு டாஸ்மாக் மதுபான கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்தக் கடையில் கடந்த ஜூலை மாதம் 29ஆம் தேதி இரவு நேரத்தில் கடையின் சுவற்றில் துளை போட்டு உள்ளே புகுந்து மதுபான பெட்டிகளைக் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இது குறித்து அந்த கடையின் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் சோழதரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜா மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து மதுபாட்டில்கள் திருடர்களை தேடி வந்தனர்.
இந்த நிலையில் டாஸ்மாக் கடை அருகே உள்ள தாமரை குளத்தில் சில மது பாட்டில்கள் மற்றும் சுவரை உடைக்க பயன்படுத்திய சுத்தி போன்ற ஆயுதங்களை போலீஸார் கண்டெடுத்தனர். இதையடுத்து போலீசார் பாளையங்கோட்டை வடக்குபாளையம் ரவுண்டானா அருகே, சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும் அளவில் சென்ற 2 வாலிபர்களை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். அதில் அவர்கள் இருவரும் பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்த டேவிட் பிச்சை மகன் வினோத் ராஜ், அந்தோணி சாமி மகன் ஏசுராஜ் என்பது தெரியவந்தது. இவர்கள் இருவரும் டாஸ்மாக் கடையின் சுவற்றில் துளை இட்டு மதுபான பாட்டில்களை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் 2-பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் இருவரையும் காட்டுமன்னார்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். அவர்களிடமிருந்து 19 ஆயிரம் பணம் 32 மதுபாட்டில்கள் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். டாஸ்மாக் கடையின் சுவற்றில் துளையிட்டு உள்ளே புகுந்து கொள்ளையடித்த இருவர் போலீசாரிடம் பிடிபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.