Skip to main content

முதல் மாநாடு; அரசியல் பயிலரங்கம் நடத்தும் த.வெ.க.

Published on 17/10/2024 | Edited on 17/10/2024
tvk workshop regards his partu first conference meetting

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியைக் கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்த நிலையில் உறுப்பினர் சேர்க்கை, நிர்வாகிகள் நியமனம், மாவட்ட அளவில் கட்சியை வலுப்படுத்துவது என அடுத்தடுத்து நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதையடுத்து கட்சிக்கான கொடியைக் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்தினார். மேலும் கட்சிக்கான பாடலையும் வெளியிட்ட அவர் கட்சிக் கொடிக்கான விளக்கத்தை விரைவில் நடக்கும் மாநாட்டில் சொல்வதாகத் தெரிவித்திருந்தார். அதன்படி த.வெ.க.வின் முதல் மாநாடு விழுப்புரத்தில் உள்ள விக்கிரவாண்டியில் வருகிற 27ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதனையொட்டி சமீபத்தில் மாநாட்டிற்கான பந்தக் கால் பூஜை விழா பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொள்ள விமர்சியாக நடைபெற்றது. இதையடுத்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த், பல்வேறு ஊர்களில் மாநாடு குறித்து ஆலோசனைக் கூட்டம் நடத்தியிருந்தார். இதன் தொடர்ச்சியாக த.வெ.க. மாநாடு தொடர்பான ஏற்பாடுகளைச் செய்ய 27 குழுக்களை அக்கட்சி சார்பில் அமைக்கப்பட்டது. இதையடுத்து தற்காலிக தொகுதி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் மாநில மாநாட்டு குழுக்கள் மற்றும் தற்காலிக தொகுதிப் பொறுப்பாளர்களுக்கு அரசியல் பயிலரங்கம் மற்றும் மாநாட்டு பணிகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக த.வெ.க. பொதுச் செயலாளர் ஆனந்த் வெளியிட்ட அறிக்கையில், “நம் கழகத் தலைவரின் அறிவுறுத்தல் படி, நமது முதல் மாநில மாநாடான வெற்றிக் கொள்கைத் திருவிழா குறித்து, மாநாட்டுக் குழுக்கள் மற்றும் தற்காலிகத் தொகுதிப் பொறுப்பாளர்களுக்கு அரசியல் பயிலரங்கம் மற்றும் மாநாட்டுப் பணிகளுக்கானக் குழுக்களின் நெறிமுறைகள் குறித்த கலந்தாய்வு, சேலம் மாவட்டம், ஆத்தூரில் உள்ள அம்மம்பாளையம் கொங்கு திருமண மாளிகையில், 18.10.2024 வெள்ளிக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ளது. 

இப்பயிலரங்கில் அரசியல் திறனாய்வாளர்கள் கலந்துகொண்டு கீழ்க்கண்ட தலைப்புகளில் கருத்துரை வழங்க உள்ளனர். பொருள்: 1. இதுவரை தமிழகத்தில் நடந்த மாநாடுகள் குறித்த பார்வை 2. கொள்கைகள் மற்றும் கருத்தியலை அணுகும் முறை 3. சமூகப் பொறுப்புணர்வு, கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் மாநாட்டைச் சிறப்பிப்பது 4. வெற்றிக் கொள்கைத் திருவிழா -விளக்கவுரை 5. மாநாட்டுக் குழுக்களுக்கான கலந்தாய்வு” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்