காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏவுமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கடந்த டிசம்பர் மாதம் 14ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இதனால், ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் பதிவாகும் வாக்குகள் பிப்ரவரி 8ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது.
இந்த இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் 10.01.2025 அன்று தொடங்கியது. இன்று (17/01/2025) வேட்புமனு தாக்கல் நிறைவு பெறுகிறது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை 18ஆம் தேதி நடைபெறும். வேட்பாளர்கள் தங்களுடைய வேட்புமனுக்களைத் திரும்பப் பெற ஜனவரி 20ஆம் தேதி கடைசி நாளாகும். இதனையொட்டி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரங்கள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. தேர்தல் பிரசாரம் மேற்கொள்வதற்கு அனுமதி பெற 48 மணி நேரத்திற்கு முன்பு தேர்தல் நடத்தும் அலுவலரிடம் உரிய அனுமதி பெறவேண்டும்.
இந்த நிலையில், வ.உ.சி பூங்கா முன்பகுதி மற்றும் பவானி சாலையில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த ஈரோடு கிழக்கு மண்டலச் செயலாளர் நவநீதன் உள்பட 8 நபர்கள் உரிய அனுமதி பெறாமல் நாம் தமிழர் கட்சி பேனர்களை வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பறக்கும் படை அதிகாரிகள் நவீன்குமார் மற்றும் செல்வகணபதி ஆகியோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வீரப்பன் சத்திரம் மற்றும் கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.