விஜய், தனது மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றியுள்ளார். தமிழக வெற்றி கழகம் என தனது கட்சிக்கு பெயர் வைத்துள்ளதாக அறிவித்த விஜய், அதை இந்தியத் தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளார். கட்சியின் பெயரை அறிவித்ததைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கட்சி நிர்வாகிகள் கேக் வெட்டியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். மேலும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தனர். அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் தமிழக வெற்றி கழகத்தை தலைவர் விஜய் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டு மக்களின் பேரன்போடு நான் முன்னெடுத்துள்ள அரசியல் பயணத்திற்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்த பெருமதிப்புக்குரிய அரசியல் கட்சி தலைவர்கள், திரைத்துறை நண்பர்கள், பாசத்துக்குரிய தமிழக தாய்மார்கள், சகோதர சகோதிரிகள், ஊக்கமளிக்கும் ஊடகவியலாளர்கள், ‘என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள்’ அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளுடன் பணிவான வணக்கங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.