Skip to main content

ஏழைகளுக்கு வீடு வழங்கிய த.வெ.க.

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
tvk party introduced Free Housing Scheme

தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சி தொடங்கியுள்ள விஜய், 2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை எனத் தெரிவித்து 2026 ஆம் ஆண்டு தான் நமது இலக்கு என்று தமிழக சட்டமன்றத் தேர்தலை குறிவைத்து செயல்பட்டு வருகிறார். கட்சியின் முதல் கூட்டமாக, கடந்த மாதம் 7 ஆம் தேதி சென்னை பனையூரில் உள்ள அலுவலகத்தில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் விஜய் நேரில் கலந்து கொள்ளவில்லை. ஆனால் காணொளி வாயிலாகப் பேசியதாக கட்சியினர் தகவல் அளித்தனர். இதனைத் தொடர்ந்து த.வெ.க-வின் உறுப்பினர் சேர்க்கை மற்றும் உட்கட்சிக் கட்டமைப்பு விரிவாக்கம் தொடர்பான நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கடந்த மாதம் 19 ஆம் தேதி நடைபெற்றது. கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் மாவட்டத் தலைமை நிர்வாகிகள் கலந்துகொண்டு உறுதிமொழி ஏற்றனர். 

இதனைத் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினர்களைச் சேர்க்கும் பணி படுதீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கான பிரத்தியேக செயலி அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. பின்பு த.வெ.க. தலைவர் விஜய் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு நேரடியாக மக்களை சந்திக்கவுள்ளதாக புஸ்ஸி ஆனந்த தெரிவித்தார். அவரை சந்திக்க கட்சியின் தொண்டர்கள் ஆர்வமாக உள்ளனர். இப்போது அவர் வெங்கட் பிரபு நடிக்கும் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் படத்தில் நடித்து வருகிறார். இது மட்டுமல்லாது இன்னுமொரு படத்தில் நடித்துவிட்டு பின்பு முழு நேர அரசியலில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளார். 

இதனிடையே மக்கள் இயக்கமாக இருந்தபோது பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டது. தளபதி விஜய் பயிலகம், இலவச சட்ட ஆலோசனை மையம், தளபதி விஜய் நூலகம் எனத் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், அரசியல் கட்சி தொடங்கிய பிறகு முதல் முறையாக தளபதி விலையில்லா வீடுகள் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த எருக்குவாய் ஊராட்சியில் ஏழை குடும்பங்களைச் சேர்ந்த 7 பேருக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இலவசமாக வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளது. அதனை அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் திறந்து வைத்தார். மேலும் அந்த ஏழு குடும்பங்களுக்கு மின்விசிறி உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் வழங்கப்பட்டன.

சார்ந்த செய்திகள்