திரைப்படங்களில் நடித்துக் கொண்டே தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியையும் நடத்தி வருகிறார் விஜய். மேலும் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் தான் தனது இலக்கு எனக் குறிவைத்துச் செயல்பட்டு வருகிறார். அந்த வகையில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வந்த நிலையில் உட்கட்சிக் கட்டமைப்பு விரிவாக்கம் தொடர்பான நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டமும் அவ்வப்போது நடைபெற்று வந்தது.
அடுத்தகட்டமாக கட்சிக்கான கொடியை இன்று வெளியிட இருக்கிறார் நடிகர் விஜய். இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று அதற்கான நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்காக 5,000 பேருக்கு அனுமதி கேட்கப்பட்டிருந்த நிலையில் 300 பேர் மட்டுமே பங்கேற்க போலீசார் அனுமதி அளித்துள்ளனர். நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக கட்சிக் கொடியில் வாகை மலர் இடம் பெற்றிருப்பதாக முன்னதாகவே தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில் கூடுதல் தகவலாக போர் யானைகள் இரு வண்ணங்களில் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த நிகழ்ச்சிக்காக கட்சி அலுவலகம் அமைந்துள்ள சாலையின் இரு புறங்களிலும் தடுப்புகள் வைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நிகழ்ச்சிகள் கலந்து கொள்ளும் மாவட்ட தலைவர்கள் சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுகின்றனர். நீலாங்கரை கேஷுவரீவனா டிரைவ் சாலையில் பொதுமக்கள் நடைப்பயிற்சி செல்வதற்கு அனுமதி இன்றும் மறுக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கட்சிக் கொடி மட்டுமல்லாது கட்சிக்கான பாடலையும் கட்சியின் தலைவர் விஜய் அறிமுகம் செய்ய இருக்கிறார்.
இந்த கொடி அறிமுக விழாவில் நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் தாய் ஷோபனா உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர். கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் விஜய்யின் பெற்றோர் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார். தற்பொழுது நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் இருந்து நடிகர் விஜய் புறப்பட்ட நிலையில் இன்னும் சற்று நேரத்தில் கட்சி கொடியேற்று விழா தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.