கரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மக்கள் வெளியிடங்களுக்கு செல்வதை தவிர்த்து வருகின்றனர். அதையும் மீறி வெளியில் சுற்றுபவர்களை் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதே போல சமூக இடைவெளி இல்லாமல் மக்கள் கூட்டங்களை அதிகம் கூட்டும் கடைகள் மீதும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பலர் அத்தியாவசியப் பொருள் வாங்க செல்வதாக சொல்லி வெளியில் சுற்றுவதாக தகவல்கள் வெளிவருகிறது.
இந்த நிலையில் தான் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள், இறப்புகள் போன்ற தவிர்க்க முடியாத நிகழ்ச்சிகளில் குறைந்த அளவில் மக்கள் சென்று வர அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் இதையும் பலர் தவறாக பயன்படுத்தி வந்ததையடுத்து மேலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது,
கரோனா தொற்று பரவாமல் தடுக்க மாவட்டத்தில் 8 சாலைகளும் மூடப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஊரடங்கு அமலில் இருப்பதால் மாவட்ட எல்லையை கடந்து அவசரத் தேவைகளுக்காக செல்வோர் இணையத்தளம் மூலம் தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் ஆய்வுகள் செய்யப்பட்டு அனுமதி வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.