புதுக்கோட்டை மாவட்டம் சம்மட்டி விடுதி ஊராட்சி, மேல விடுதி கிராமத்தில் இரு கால்களையும் இழந்த நிலையில், 26 வயதான இளம் காதல் மனைவி தன்னை (ராஜா) தாயைப் போல பார்த்துக் கொள்கிறார் என்ற நெகிழ்ச்சியான செய்தியும் அதோடு அவருக்கு உதவிகள் கிடைக்க கோரிக்கையும் வைத்து கடந்த 9ஆம் தேதி நக்கீரன் இணையத்தில் செய்தியும் 11ஆம் தேதி நக்கீரன் இணையத்தில் வீடியோவும் பதிவிட்டிருந்தோம்.
இந்தச் செய்திகளைப் பார்த்து அமைச்சர் விஜயபாஸ்கர், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் ஜெயலெட்சுமி ஆகியோர் உதவிகள் செய்வதாக உறுதி அளித்துள்ளனர். இந்த நிலையில்தான் 'மக்கள் பாதை' சொன்ன தகவல்களை உறுதிப்படுத்தி நக்கீரன் இணையத்தில் செய்தியாக வெளியிட்டோம். இந்தச் செய்திகளைப் பார்த்த நக்கீரன் இணைய வாசகர்கள் ராஜாவின் கைப்பேசி எண்ணைப் பெற்றனர். பலரும் ராஜா - விமலா தம்பதியிடம், ஃபோனில் பேசி 4 வருடமாக ஒரு குழந்தையைப் போல பார்த்துக் கொள்ளும் மனைவி விமலாவை பாராட்டி வருவதுடன் உதவிகள் செய்வதாகவும் கூறியுள்ளனர்.
பலர் ஃபோனில் பேசியதையே மிகப்பெரிய ஊக்கமாக எடுத்துக் கொண்டுள்ளனர் ராஜா தம்பதி. அதே போல நக்கீரன் இணைய வீடியோவைப் பார்த்து கண்கலங்கிய புதுக்கோட்டை மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர் நியாஸ் அகமது தலைமையில் ஒரு மாதத்திற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கிச் சென்று வழங்கியதுடன் நேரில் சென்று உதவ முடியாத நிலையில் இருந்த ஒரு கொடையாளர் கொடுத்த பண உதவியையும் வழங்கியுள்ளனர்.