மணல் கடத்தல் தொடர்பாக புகார் அளித்ததே விஏஓ லூர்து பிரான்சிஸ் கொலை செய்யப்படக் காரணம் என காவல்துறையினர் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தூத்துக்குடி வல்லநாடு அருகே கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் அலுவலகத்தில் பணியில் இருந்த போதே மர்ம நபர்களால் வெட்டப்பட்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தூத்துக்குடி மாநகர காவல்துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் மற்றும் காவலர்கள் உடனடியாக விசாரணையை தொடங்கினர்.
முதற்கட்ட விசாரணையில் மணல் கடத்தல் அல்லது மணல் அள்ள அனுமதி அளிப்பது தொடர்பாக இச்சம்பவம் நடந்திருக்கலாம் என கூறப்பட்டது. இது தொடர்பாக லூர்து பிரான்சிஸை வெட்டியவர்கள் என ராமசுப்ரமணியன் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில் மாரிமுத்து என்பவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். மேலும் தனிப்படைகளை அமைத்தும் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வெட்டுக்காயங்களுடன் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட லூர்து பிரான்சிஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் பின் இந்த வழக்கு கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டு தப்பிச் சென்ற குற்றவாளிகளை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
காவல்துறையினர் விசாரணையில் கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் கடந்த 13 ஆம் தேதி தூத்துக்குடி முறப்பநாடு பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றங்கரையில் மணல் கடத்தப்படுவதாக முறப்பநாடு காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அப்புகாரில் இன்று லூர்து பிரான்சிஸை கொலை செய்த ராமசுப்ரமணியன் என்பவர் மற்றும் சில நபர்களின் பெயர்களையும் குறிப்பிட்டு இருந்தார். இதன் பின் ராமசுப்ரமணியன் மீது அன்றே வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதன் பின் காவல்துறையினர் விசாரணை செய்ததில் ராமசுப்ரமணியன் என்பவர் மீது ஏற்கனவே பல்வேறு குற்றவழக்குகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கொலை முயற்சி வழக்குகள், மேலும் சில காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகளும் அவர் மேல் பதியப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று லூர்து பிரான்சிஸ் ராமசுப்ரமணியன் மீது புகார் அளித்ததன் காரணமாகவே பழி வாங்கும் நோக்கில் அவரை வெட்டிக் கொலை செய்துள்ளார். அரசு அதிகாரி சரியாக பணி செய்ததன் காரணமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் வி.ஏ.ஓ. லூர்து பிரான்சிஸ் குடும்பத்துக்கு ரூ. 1 கோடி நிவாரணம் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். மேலும், குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் அரசுப்பணி வழங்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.