தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகில் உள்ள கூசாலிப்பட்டியின் விஸ்வநாத் காலனியைச் சேர்ந்த ராஜேந்திரனும் (40), அவரது மனைவியும் கடந்த 13.04.2014 அன்று அங்குள்ள தெரு குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த கணபதி (53), அவர் மகன் ராமர் (30), லட்சுமணன் (30), கண்ணன் (25) ஆகியோருக்கும் ராஜேந்திரனுக்கும் தண்ணீர் பிடிப்பதில் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த கணபதி மற்றும் அவரது மகன்கள் ராஜேந்திரனையும், அவரது மனைவியையும் சரமாரியாக வெட்டியதில் ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மனைவி படுகாயமடைந்தார். கொலைச் சம்பவம் குறித்து விசாரணை நடத்திய நாலாட்டின்புத்தூர் போலீசார் கணபதி மற்றும் அவரது மகன்கள் உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்து சிறையிலடைத்தனர்.
இந்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த கணபதியும் அவரது மூன்று மகன்கள் தலைமறைவாகினர். கோர்ட்டிலும் ஆஜாராகவில்லை. இதையடுத்து அவர்களை ஆஜர்படுத்த தூத்துக்குடி ஜே.எம்-2 கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது. பல ஆண்டுகளாகியும் கொலைக் குற்றவாளிகள் சிக்கியபாடில்லை. இந்நிலையில் தற்போது மாறுதலாகி வந்த தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.யான பாலாஜி சரவணன் உத்தரவின்பேரில் கோவில்பட்டி டி.எஸ்.பி. உதயசூரியன் மேற்பார்வையில் கோவில்பட்டி இன்ஸ்பெக்டர் பத்மாவதி தலைமையில், எஸ்.ஐ. நாராயணசாமி உள்ளிட்டோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு கணபதி உள்ளிட்ட 4 பேரையும் தேடி வந்தனர்.
தொடர்ந்து இன்ஸ்பெக்டர் பத்மாவதி தனிப்படையினரின் தேடலில் அவர்கள் 4 பேரும் மும்பையில் இருப்பதாகத் தகவல் கிடைத்திருக்கிறது. இதன்பின் மும்பை சென்ற தனிப்படை மாறுவேடத்தில் அவர்களைத் தேடி அலைந்த போது, நகர்ப்புற ரயில்வே ப்ளாட்பார்மில் அவர்கள் இட்லி கடை நடத்தி வந்ததை மாறு வேடத்தில் ஒரு வாரமாகக் கண்காணித்தனர்.
அதனைத் தொடர்ந்து ஒரு நாள் இரவில் அவர்களின் வீட்டில் தனிப்படையினர் மடக்கி கைது செய்தனர். பின்னர் தூத்துக்குடி கொண்டு வரப்பட்ட கணபதி உள்ளிட்ட 4 பேரும் ஜே.எம்-2 கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு பாளை மத்தியசிறையில் அடைக்கப்பட்டனர். தண்டனைக்குப் பயந்து 8 ஆண்டுகளாக மும்பையில் பதுங்கியிருந்த 4 கொலைக் குற்றவாளிகளை மாறுவேடத்தில் கைது செய்து கொண்டு வந்த இன்ஸ்பெக்டர் பத்மாவதி உள்ளிட்ட தனிப்படையினரை டி.எஸ்.பி. உதயசூரியன் மற்றும் எஸ்.பி. பாலாஜி சரவணன் ஆகியோர் பாராட்டினர்.