தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள உடன்குடி என்ற இடத்தில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அப்பகுதியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் பொன்சிங் என்பவர் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இத்தகைய சூழலில் தான் இவர் அப்பள்ளியில் படித்து வரும் ஐந்து மாணவிகளை, கடந்த மாதம் 22ஆம் தேதி தூத்துக்குடியில் நடைபெற்ற மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க அழைத்துச் சென்றுள்ளார்.
அப்போது மறுநாள் போட்டி நடைபெறும் என்பதால் அங்கு உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கி உள்ளனர். அப்போது உடற்கல்வி ஆசிரியர் பொன்சிங், மாணவிகளை மது அருந்து சொல்லி மதுவைக் கொடுத்துள்ளார். அதன் பின்னர் பொன்சிங் மாணவிகளிடம் முறை தவறி நடந்து கொண்டதுடன், பாலியல் ரீதியாகவும் தொல்லை கொடுத்துள்ளார். அதோடு இது குறித்துப் பெற்றோர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்திடம் தெரிவித்தால் மாணவிகளைப் படிக்க முடியாத அளவிற்குச் செய்து விடுவேன் என்று மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் இது குறித்துப் பாதிக்கப்பட்ட மாணவிகள் பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர்கள் இன்று (11.11.2024) மதியம் பள்ளியை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட கல்வி அலுவலர் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு வருகை தந்து பாதிக்கப்பட்டு மாணவிகளிடம் விசாரணை விசாரணை மேற்கொண்டார். அதே சமயம் பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோரிடம் திருச்செந்தூர் போலீசார், வட்டாட்சியர் ஆகியோர் விசாரணை நடத்தினர். இதற்கிடையே குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியர் பொன்சிங் தலைமறைவாகி இருந்த நிலையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். பள்ளி மாணவிகளை விளையாட்டுப் போட்டிகளுக்கு உடற்கல்வி ஆசிரியர் அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும், அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.