தூத்துக்குடி மாவட்டம் கிருஷ்ணராஜபுரம் பகுதியில் தெரு விளக்கை சீர் செய்யும் பணியில் ஈடுபட்ட மாநகராட்சி மின் ஒப்பந்த பணியாளர் முருகன் என்பவர் மின்கம்பத்தில் மேலே இருக்கும்போது மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்து, நிதியுதவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி பகுதி-1 கிராமம், அம்பேத்கர் நகர் மூன்றாவது தெருவைச் சேர்ந்த ஆத்திக்கண்ணு என்பவர் மகன் ஆ.முருகன் (வயது 45) நேற்று (24.12.2023) கனமழையினால் சேதமடைந்த கிருஷ்ணராஜபுரம், ஐந்தாவது தெருவில் உள்ள மின்கம்பத்தினை பழுதுபார்த்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
இவ்விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ஐந்து இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார். முன்னதாக தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மின் ஒப்பந்த பணியாளர் முருகன் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறியது குறிப்பிடத்தக்கது.