இபிஎஸ் - ஓபிஎஸ் அணியினர் இடையே தந்தை பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வில் சலசலப்பு ஏற்பட்டது.
தமிழ்நாடு அரசின் சார்பில் தந்தை பெரியார் அவர்களின் 145 ஆவது பிறந்த நாள் இன்று அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் வேலூர் மாவட்டம் அண்ணா சாலையில் அமைந்துள்ள வேலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நிறுவப்பட்டுள்ள தந்தை பெரியார் உருவச் சிலைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காலை 10.15 மணியளவில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அந்த வகையில் அரசியல் கட்சியினர், பொதுமக்கள் எனப் பல்வேறு தரப்பினரும் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை அண்ணா சாலை, அண்ணா மேம்பாலத்தின் கீழ் உள்ள பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்த ஓ.பன்னீர்செல்வம் அணியினர் வந்தனர். அப்போது பெரியார் சிலைக்கு கீழே பெரியார் உருவப்படத்தை வைத்து ஓபிஎஸ் அணியினர் மரியாதை செலுத்தினர். இதையடுத்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் கோகுல இந்திரா உள்ளிட்ட எடப்பாடி பழனிசாமி அணியினர், ஓபிஎஸ் அணியினர் வைத்த பெரியார் படத்துக்கு நாங்கள் மரியாதை செலுத்த மாட்டோம் எனக் கூறி, சிலையின் மற்றொரு புறத்தில் இன்னொரு பெரியார் படத்தை வைத்து மரியாதை செலுத்தினர். அதன்பின்னர் அங்கு வந்த ஓ.பன்னீர்செல்வம் தனது தரப்பினர் வைத்த படத்திற்கு மரியாதை செலுத்தினார். இதனால் அங்கு கூடியிருந்த இரு தரப்பு தொண்டர்களிடையே சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.