டிசம்பர் 27ஆம் தேதி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நடைபெற்ற ஆரூத்ரா தரிசனத்தின்போது, பாதுகாப்பு பணியில் இருந்த திருவண்ணாமலை மாவட்டம், தேசூர் காவல்நிலைய ஆய்வாளரும், வந்தவாசி அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளருமான (பொறுப்பு) காந்திமதி, பக்தர்களை ஒழுங்குபடுத்தி சுவாமி தரிசனம் செய்து வைத்துக்கொண்டு இருந்துள்ளார். அப்போது கோவில் அறங்காவலர் குழு தலைவர் ஜீவானந்தம் தம்பியும், திமுக முன்னாள் நகர மன்ற தலைவரும், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினருமான ஸ்ரீதர் துணைவியார் சிவசங்கரி, சுவாமிக்கு நேராக நின்று நீண்ட நேரம் சுவாமி கும்பிட்டதால் பின்னால் இருந்த பக்தர்களுக்கு சுவாமி தெரியவில்லை என கத்தியுள்ளனர்.
அப்போது ஏற்பட்ட பிரச்சனையில் காந்திமதியை சிவசங்கரி கன்னத்தில் அடித்தார். அவருடன் ஸ்ரீதரன், கோவில் ஊழியர் ராஜேஷ் இன்ஸ்பெக்டரை தாக்கினர். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் தந்த புகாரின் கீழ் டிசம்பர் 28ஆம் தேதி பணி செய்யாமல் தடுத்தல், தாக்குதல், பெண் வன்கொடுமை பிரிவு என்கிற பிரிவுகளின் கீழ் ஸ்ரீதர், அவரது துணைவி சிவசங்கரி மற்றும் கோவில் ஊழியர் என மூவர் மீது நகர காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் கைதாகாமல் இருக்க ஸ்ரீதர், அவரது துணைவியார் சிவசங்கரி தலைமறைவாக இருந்து வருகின்றனர். கடந்த வாரம் திருவண்ணாமலை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனு செய்தார் ஸ்ரீதர். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இரண்டாவது முறையாக ஜனவரி 12ஆம் தேதி மீண்டும் இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு அதே மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் ஸ்ரீதரன். இந்த ஜாமீன் மனு மீது, திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அதிமுக வழக்கறிஞர் அணியின் மாவட்டசெயலாளரும், அதிமுக ஆட்சியில் அரசு வழக்கறிஞராகவும் இருந்த அன்பழகன் ஆஜராகி 45 நிமிடம் வாதாடினார். அப்போதும் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில் மூன்றாவது முறையாக மாவட்ட நீதிமன்றத்தில் ஜனவரி 23 ஆம் தேதி ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது அரசு வழக்கறிஞர் கே.வி.மனோகரன், காவல்துறை விசாரணை நடத்தி முடித்துவிட்டது, இதில் தொடர்புடைய குற்றவாளி ஒருவர் கைது செய்யப்பட்டுவிட்டார் என்றார்.
ஸ்ரீதர் தரப்பு வழக்கறிஞர் அன்பழகன், காவல்துறை தரப்பில் விசாரணை முழுவதுமாக நடத்தி முடித்துவிட்டது. என் கட்சிக்காரர் சமுதாயத்தில் முக்கியமானவர், அவர் மீது இதற்கு முன்பு எந்த குற்றவழக்குகளும் இல்லை, குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவரும் இல்லை. அவரால் வழக்கில் எந்த தாக்கத்தையும் செலுத்த முடியாது. அதனால் கருணை கூர்ந்து என் கட்சிக்காரருக்கு ஜாமீன் வழங்கவேண்டும் என வாதத்தை முன்வைத்தார்.
இந்நிலையில் இந்த வழக்கில் திடீர் திருப்பமாக தாக்கப்பட்ட காவல்நிலைய ஆய்வாளர் காந்திமதியின் கணவர் சரவணன் நீதிமன்றத்திற்கு வந்துள்ளார். பாஜகவை சேர்ந்த வழக்கறிஞர் சங்கர் மூலமாக நீதிமன்றத்தில் ஒரு மனுதாக்கல் செய்துள்ளார். மூன்று தரப்பின் வாதங்களை கேட்டு நீதிபதி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய ஆய்வாளர் காந்திமதியின் கணவர் சரவணன், “பாதுகாப்பு பணியில் இருந்த என் மனைவியை தாக்கியதால் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார். சாமி தெரியவில்லை என பொதுமக்கள் சத்தம் போட்டதால்தான் அந்த பெண்மணியை ஓரம் நிற்கச் சொல்லியுள்ளார். எங்க கோவிலுக்குள்ள போலீஸ்.. என்று சொல்லி தரம் தாழ்ந்த வார்த்தையை உபயோகப்படுத்தி யார் உள்ள வரச்சொன்னதுன்னு சொல்லி தாக்கியிருக்காங்க. இதை என் மனைவி இதை என்னிடம் சொல்லி அழுதார். அவமானத்தில் அவர் பணிக்கு செல்லாமல் விடுமுறை எடுத்துக்கொண்டு ஆரணியில் அவர் அம்மா வீட்டில் உள்ளார். தாக்கியவர்கள் மீது இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை, நாங்கள் அடிக்கவேயில்லை என ஜாமீன் மனு போட்டுள்ள தகவல் தெரிந்தே நடவடிக்கை எடுக்கவேண்டும் என மனுதாக்கல் செய்துள்ளேன்” என்றார்.
திமுக பிரமுகர் ஸ்ரீதரனை இந்த வழக்கு விவகாரத்தில் யாரோ தவறாக வழிநடத்தி இந்த பிரச்சனையை சிக்கலாக்குகிறார்கள் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.