மிருக குணத்துடன் செயல்படும் மத்திய அரசுக்கு அதிமுக அரசு துணை போய்கொண்டிருப்பதாக திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவானன் தெரிவித்தார்.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில், முதல் கட்ட வாக்கு பதிவு திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, கோட்டூர், முத்துப்பேட்டை, திருவாரூர் உட்பட 5 ஒன்றியங்களில் நடைபெற்றது. முதல் கட்ட வாக்கு பதிவில் திருவாரூர் மாவட்டத்தில் 76.93 சதவீதம் வாக்கு பதிவு நடைபெற்றது. இந்நிலையில் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான வாக்கு பதிவு இன்று காலை 7மணிக்கு துவங்கி மாலை 5 மணிக்கு நிறைவடைகிறது.
இரண்டாம்கட்ட தேர்தலில் மொத்தம் 48 மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், 340 ஒன்றிய குழு உறுப்பினர்கள் , 862 கிராம ஊராட்சி மன்ற தலைவர்கள், 4328 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் போட்டியிடுகின்றனர். வாக்கு பதிவு 933 மையங்களில் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஐந்து ஒன்றியங்களில் காலை 9 மணி நிலவரப்படி 14.44 சதவீதம் வாக்குப்பதிவாகியுள்ளது.
இந்த நிலையில் கொரடாச்சேரி அருகே கமுகக்குடியில் ஊராட்சி ஒன்றய தொடக்கப்பள்ளியில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் வாக்கு செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசு மிருக குணத்துடன் செயல்படுகிறது. இஸ்லாமிய, இலங்கை மக்களை பற்றி கவலை கொள்ளாமல் குடியுரிமை சட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. இதற்கு அதிமுக அரசும் துணையாக செயல்படுகிறது. நடைபெறுகின்ற உள்ளாட்சி தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெறும்" என தெரிவித்தார்.