Skip to main content

கிராமத்தையே மிரட்டும் காசநோய்; முகாமிட்டுள்ள மருத்துவர்கள்!

Published on 09/01/2024 | Edited on 09/01/2024
Tuberculosis disease is on the rise in a village in Tenkasi district

தென்காசி மாவட்டத்தின் கடையநல்லூர் அருகிலுள்ள குமந்தாபுரம் கிராமத்தில் காசநோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அதன் அறிகுறிகள் தென்படுவது உள்ளிட்ட தகவலையறிந்த கடையநல்லூர் அரசு மருத்துவமனை மருத்துவர்களின் காசநோய் கண்டறியும் முகாம் மாவட்ட துணை இயக்குநர் வி.பி.துரை அவர்களின் அறிவுறுத்தலின்படி நடந்தது. கடையநல்லூர் சேர்மனும் பங்கேற்றார். 100 பேர்கள் முகாமிற்கு வந்ததில் சோதனை மேற்கொள்ளப்பட்டு அவர்களில் 38 பேர்களுக்கு எக்ஸ்ரேயும் எடுக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.

“இங்குள்ள காளியம்மன் கோவில் தெருவில் நான்கு முதல் 5 பேருக்கு காசநோய் உள்ளது. பிள்ளையார் கோவில் தெருவில் ஒருவர் என இந்த சுற்றுவட்டாரப் பகுதியில் காசநோய் இருக்கிறது. மெயின் ரோட்டுக்கு அந்தப் பக்கம் தெரியவில்லை. 3வது வார்டில் ஒரு கேஸ். அவர்கள் முறையான மருத்துவ சிகிச்சையில் இருக்கிறார்கள். மாத்திரை மருந்துகள் வழங்கப்படுகின்றன” என்கிறார் மருத்துவர் சதீஷ்குமாரி.

Tuberculosis disease is on the rise in a village in Tenkasi district

குமந்தாபுரத்தின் வார்டு கவுன்சிலர், இந்த ஏரியாவுல ஐந்தாயிரம் மக்களிருக்காங்க. அத்தனை பேரும் விவசாய மக்கள். சுகாதார கட்டமைப்புமில்லை. சுகாதாரமின்மையினால் தான் காசநோய் போன்றவைகள் வருகின்றன. அதனால் அவர்களுக்கு சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தனும். பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான சிகிச்சை மாத்திரை ஊட்டச்சத்து மாத்திரை, நிவாரணமா ஐநூறு ரூபாய் மாதம் வழங்க வேண்டும். ஏனென்றால் காச நோயாளிகளை மட்டும் நூறு பேருக்கு மேல் சிகிச்சையில் இருக்கிறார்கள். ஏழை, எளிய மக்களுக்காக இங்கே ஆரம்ப சுகாதார நிலையம் ஆரம்பித்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். நோய் வராமலிருக்க தடுப்பூசி போடவேண்டும். அரசு முழுக் கவனம் செலுத்த வேண்டும்” என்றார் அழுத்தமாக.

“மழைக்காலத்தில் தான் காசநோய் பரவுகிறது; நோயாளிகளும் சிரமப்படுகிறார்கள். அவர்களுக்கு போதிய மருத்துவ சிகிச்சையை அளிக்க இங்கேயே ஏற்பாடு செய்ய வேண்டும். அப்போதுதான் நோயின் வீரியம் குறையும்” என்கிறார் குமந்தாபுரத்தின் குமார். முகாமில் காசநோய் மேற்பார்வையாளர்களான  செல்வகுமார், சிபி சக்கரவர்த்தி மற்றும் எக்ஸ்ரே நிபுணர்கள் பங்கேற்றனர்.

 

சார்ந்த செய்திகள்