அதிமுகவின் அதிகார மையம் என்று சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இருந்தது மன்னார்குடி. ஜெ. வின் மறைவுக்கு பிறகு அதிகார மையத்தை ஒதுக்கினார்கள் அதிமுகவினர். தங்களுக்குள் உடைத்து கொண்டார்கள் மன்னார்குடி வகையறாக்கள்.
ஜெ. மறைந்த பிறகும் மன்னார்குடியின் வழிகாட்டுதலில் ஆட்சியையும் கட்சியையும் சசிகலா தான் வழிநடத்த வேண்டும் என்று அவர்களுக்கு ஆசை வார்த்தைகளை கூறிய மக்களவை துணை சபா தம்பிதுரை போன்றவர்களின் பேச்சை கேட்கவேண்டாம் என்று திவாகரன் சொன்னதை கேட்காமல் தினகரன், டாக்டர் வெங்கடேசன் பேச்சுகளை கேட்ட சசிகலா கட்சி பதவியை ஏற்ற நிலையில் பிரச்சனை உருவான நிலையில் பதவிக்கு அழைத்து வந்தவர்கள் ஒதுங்கியதுடன் விலக்கி வைக்கவும் குரல் உயர்த்தினார்கள். அதன் பிறகும் அதிமுக வுடன் இணைந்து செயல்பட திவாகரன் எடுத்த முயற்சிகளுக்கு தினகரன் தரப்பினர் முட்டுக்கட்டை போட்டதால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தனித் தனி கட்சிகள் உருவாக்கினார்கள்.
இந்த நிலையில் திவாகரனால் உருவாக்கி வளர்க்கப்பட்டவர்களை தினகரன் இழுத்துக் கொண்டார். இதில் தினகரன் அணிக்கு சிறையில் இருக்கும் சசிகலாவின் ஆதரவு இருப்பதால் திவாகரனும் தனது பங்குக்கு அண்ணா திராவிடர் கழகத்தை உருவாக்கினார்.
இதன் பிறகு தனி நபர் தாக்குதல் வரை கருத்து மோதல்கள் உச்சம் பெற்றது. இந்த நிலையில் தான் ஜெ. பிறந்த நாளை மன்னார்குடியில் கொண்டாடுவதுடன் ஒரு லட்சம் பேரை கூட்டி பிரமாண்ட பொதுக்கூட்டமும் நடத்த திட்டமிட்டு அதற்கான வேலைகளில் இறங்கியுள்ளார் திவாகரன்.
பிப்ரவரி 24 ந் தேதி மாலை மன்னை பந்தலடியில் நடக்கும் ஜெ. பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து தொண்டர்களை கொண்டு வருவதுடன் அமமுகவில் அதிருப்தியில் உள்ள மாஜி சமஉ க்களையும் அழைத்து வரவும் திட்டமிட்டுள்ளனர். மேலும் இந்த பொதுக்கூட்டம் அமமுக வுக்கு பதிலடி கொடுப்பதுடன் வரும் பாராளுமன்ற தேர்தலில் தனது கட்சிக்கான கூட்டணியை பற்றி பேச வைக்கும் முயற்சியாகவும் மாற்றும் திட்டமும் உள்ளதாக கூறப்படுகிறது.
எப்போதும் போல ஓபிஎஸ் உடன் தொடர்பில் உள்ள திவாகரன் பொதுக்கூட்டத்தின் மூலம் அதிமுக பாஜக கூட்டணியுடன் அண்ணா திராவிடர் கழகமும் கூட்டணி அமைக்கும் பணியும் தீவிரமடைந்துள்ளதாகவும் கூறுகின்றனர்.