கடலூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீமுஷ்ணம், காட்டுமன்னார்கோயில், விருத்தாசலம், வேப்பூர், திட்டக்குடி,நெய்வேலி உள்ளிட்ட பகுதிகளை பிரித்து விருத்தாசலத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்க கோரியும் , விருத்தாசலம் கோட்டத்தில் இருந்து எந்த ஒரு பகுதியையும் பிரிக்கவோ, கள்ளக்குறிச்சி மாவட்டத்துடன் சேர்க்கவோ கூடாதென வலியுறுத்தியும் விருத்தாசலம் மாவட்ட விழிப்புணர்வு இயக்கம் பல்வேறு தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றது
அதன் ஒரு பகுதியாக விருத்தாசலம் பாலக்கரை ரவுண்டானாவில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு விருத்தாசலம் விழிப்புணர்வு இயக்க ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் தங்க.தனவேல் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் கந்தசாமி, வெற்றிவேல், சோழர் கூடம் பிரவின்ராஜ், வெங்கடகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேலய்யன் வரவேற்புரை வழங்கினார்.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குழந்தை.தமிழரசன் உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்து பேசினார். அ.திமு.க முன்னாள் ஒன்றிய சேர்மன் சுந்தரராஜன், காங்கிரஸ் கட்சி மாவட்டத் தலைவர் நகர் பெரியசாமி, பாமக மாநில மகளிர் சங்க செயலாளர் மருத்துவர் தமிழரசி, ம.தி.மு.க பொதுக்குழு உறுப்பினர் செளந்தர்ராஜன், நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் கதிர்காமன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி நகரச் செயலாளர் சேகர், பா.ஜ.க மாவட்ட பொதுச் செயலாளர் செந்தில்குமார், திமுக மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் சிங்காரவேல், வழக்கறிஞரணி துணை அமைப்பாளர் ரவிச்சந்திரன், இந்திய குடியரசு கட்சி மாவட்ட தலைவர் மங்காப்பிள்ளை, முஸ்லிம் சமூதாய முன்னேற்ற சங்கம் சத்தார் பாஷா ஆகியோர் போராட்டத்தை விளக்கி பேசினர். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் கோவிந்தசாமி போராட்டத்தை முடித்து வைத்தார். உண்ணாவிரதத்தில் விழிப்புணர்வு இயக்கத்தை சேர்ந்த மதியழகன், சுரேஷ், ராமர், ராஜ்குமார், இளமங்கலம் மதியழகன் மற்றும் பொதுமக்கள், விவசாய சங்கத்தினர், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இறுதியாக தமிழன் பிரபாகரன் நன்றி கூறினார்.