தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி தொகுதியில் அடிப்படை வசதிகள் மற்றும் தொகுதி மக்களின் அத்தியாவசியத் தேவைகள் கூட பூர்த்தி செய்யப்படவில்லை எனவும், அதற்கு ஆளும் அ.தி.மு.க அரசு தான் காரணம் என்றும் கூறி, அ.ம.மு.க சார்பில் ஆண்டிபட்டி எம்.ஜி.ஆர் சிலை பின்புறம், வைகை அணை ரோட்டில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இந்த உண்ணாவிரதப் போராட்டம் காலை ஒன்பது மணிக்கு ஆரம்பித்த இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை தங்க தமிழ்ச்செல்வன் துவக்கிவைத்தார். பெரியகுளம் முன்னாள் எம்.எல்.ஏ கதிர்காமு உட்பட அ.ம.மு.க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
மாலையில் அ.ம.மு.க துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்டு பேசும் போது.. இதுவரை இரட்டை இலைச்சின்னம் வெற்றிச்சின்னமாக இருந்தது. ஆனால், இப்போது துரோகிகளின் கைகளில் சிக்கி, துரோகிகளின் சின்னமாக மாறிவிட்டது. தற்போது ஆட்சி நடத்துபவர்கள் தங்களின் சுய லாபத்திற்காக ஆட்சி நடத்துகிறார்கள். அதற்காக கை கட்டி பொம்மை போல் உள்ளனர். தேர்தல் வரும் போது, அமைச்சர்கள், எம்.எல்.ஏ க்களை மக்கள் தட்டிக் கேட்பார்கள். மக்கள் ஆட்சி மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள்.
பத்தாயிரம் இருபதாயிரம் கொடுத்து மக்களை விலைக்கு வாங்கிவிடலாம் என்று பகல் கனவு காண்கிறார்கள். அது நடக்காது. இந்த மண்ணின் மைந்தர் என்று சொல்லிக்கொள்ளும் ஓ.பன்னீர்செல்வம், நியூட்ரினோ திட்டத்தை தடுத்து நிறுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நியூட்ரினோ திட்டம் செயல்படுத்தப்பட்டால், தேனி மாவட்டத்தின் இயற்கை அழிந்துவிடும், மக்கள் வாழ முடியாது.
ஆண்டிபட்டி தொகுதி எப்பவும் ஜெயலலிதாவின் கோட்டை. அதனை வரும் தேர்தலிலும் நிரூபிப்போம் சின்னம், கட்டி, கொடி இருந்தால் மட்டும் போதாது. இரட்டை இலையை எம்.ஜி.ஆராக, ஜெயலலிதாவாக மக்கள் பார்த்தார்கள். ஆனால், இப்போது துரோகிகளின் கைகளில் இரட்டை இலை இருப்பதால் துரோகிகளின் சின்னமாக பார்கிறார்கள் என்று கூறினார்.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட, முன்னாள் எம்.எல்.ஏக் களான, ஆண்டிபட்டி தங்க தமிழ் செல்வன், பெரியகுளம் கதிர்காமு, நிலக்கோட்டை தங்க துரை, தஞ்சை ரங்கசாமி, சாத்தூர் சுப்பிரமணி, மா.மதுரை மாரியப்பன், ஒட்டபிடாரம் சுந்தர்ராஜ், பரமகுடி முத்தையா, சோழிங்கநல்லூர் பார்த்திபன், அரூர் முருகன் என 10 பேர் மட்டுமே பங்கேற்றனர். இதில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட மீதியுள்ள எட்டு டிடிவி ஆதரவு எம்.எல்.ஏ. கள் கலந்து கொள்ள வில்லை என்பது மர்மமாக இருக்கிறது. இருந்தாலும் மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.