புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே வரலாற்று சுவடுகள் புதைந்தும் மறைந்தும் இருப்பதால் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டுமென்று ஆய்வாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர்.
இதில் சித்தன்னவாசல், திருவேங்கைவாசல், குடுமியான்மலை சுற்றிலும் இருக்கக்கூடிய ஏராளமான கிராமங்களில் கல்வெட்டுகள் மற்றும் பல்வேறு வரலாற்று ஆவணங்கள் மண்ணோடு மண்ணாகி கொண்டிருப்பதாக தொடர்ந்து சமூக ஆர்வலர்கள் சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியிட்டுள்ளனர். மற்றொரு பக்கம் கல்குவாரிகளில் அதிக சத்தத்துடன் வெடிகள் வைத்து பாறைகள் உடைக்கப்படுவதால் வரலாற்று சிறப்புமிக்க கோயில்கள் , வீடுகள் வரலாற்றுச் சுவடுகளும் சிதைந்து வருகிறது.
அதேபோல வனத்துறைக்கு சொந்தமான காடுகளில் முதுமக்கள் தாழிகள் மற்றும் நினைவு சின்னங்கள், நடுகற்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டு வருவதை கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை கண்டித்ததுடன் அவற்றைப் பாதுகாக்கவும் உத்தரவிட்டிருந்தது. ஆனால் அதிகாரிகள் அவற்றை கண்டுகொள்ளவில்லை.
இப்படியான கிராமங்களில் பெருஞ்சுனை என்கிற ஒரு கிராமம் முதுமக்கள் தாழி நிறைந்த கிராமமாக உள்ளது இந்த கிராமம் இன்றைய இளைஞர்களின் மனதில் நிற்கும் சகாயம் ஐஏஎஸ் அவர்களின் சொந்த கிராமம் ஆகும். இந்த கிராமத்திலும் பல ஆண்டுகளுக்கு முன்பு கிரானைட் வெட்டி எடுக்க முயற்சிகள் நடந்தது. ஆனால் அந்த முயற்சியை தடுத்து நிறுத்தப்பட்டது. இந்த கிராமத்தில் இருந்து சற்று தொலைவில் உள்ள சிறுஞ்சுனை கிராமம். இங்கு சட்டவிரோதமாக கல்குவாரிகள் நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இங்கு பாறைகளை உடைக்க பலமான வெடிகள் வெடிக்க செய்வதால் கிராமத்தில் உள்ள வீடுகள் சேதமடைந்ததுடன் தோட்டங்களும் சேதமடைந்துள்ளது.
இப்படித்தான் சிருஞ்சனை கிராமத்தைச் சேர்ந்த பரமசிவம் என்ற விவசாயி தன் விளை நிலத்திற்கு அருகில் சட்டவிரோதமாக கல் குவாரி நடத்தப்படுவது அதில் பலமான சத்தத்துடன் வெடிப்பதால் வீடுகள் சேதம் அடைவதாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் அதிகாரிகளுக்கு புகார் மனு அளித்திருந்தார். இதனால் இந்த சட்ட விரோத குவாரியை மூட அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர். இந்த தகவல் அறிந்த
குவாரியை நடத்திவந்த மேட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்த வெள்ளைச்சாமி மற்றும் அவரது ஆட்கள் பரமசிவம் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினரை மிரட்டி உள்ளனர். அதிகாரிகளிடம் கொடுத்த புகாரை திரும்பப் பெறாவிட்டால் குடும்பத்தோடு அழித்துவிடுவோம் என்று மிரட்ட பட்டதால் விவசாயி பரமசிவம் குடும்பத்தினர் அச்சத்தில் உள்ளனர். இதுகுறித்து திருக்கோகர்ணம் காவல்நிலையத்தில் புகார் கொடுப்பதற்காக தயாராகி உள்ளனர் பரமசிவம் குடும்பத்தினர்.
இந்த பகுதி அமைச்சர் விஜயபாஸ்கரின் விராலிமலைத் தொகுதிக்குள் வருவது குறிப்பிடத்தக்கது.